
கிரிக்கெட்டையும் கபடியையும் மையப்படுத்தி உருவாகியுள்ள 'தோனி கபடி குழு' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஆரி பேசியபோது... "நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கெங்கிருந்தெல்லாமோ நிவாரண உதவி குவிகிறது. சென்னையைத் தாண்டி புற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நமக்கு வேலை இருக்காது. மேலும், சினிமாவை வாழவைக்க வேண்டும். திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும்" என்றார்.