இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இப்படத்தை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். இவர் தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தை இயக்கியவர். ஆமிர் கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். இப்படத்தை ஆமீர்கானே தயாரித்தும் உள்ளார். சங்கர் மகாதேவன் உள்ளிட்ட மூன்று பேர் இசையமைத்துள்ள இப்படம் ஸ்பேனிஷில் வெளியான ‘சாம்பியன்ஸ்’ படத்தின் ரீமேக்காகும். 

Advertisment

ஒரு பாஸ்கெட் பால் கோச், தான் செய்த சட்ட ஒழுங்கு தவறுக்காக மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடங்கிய டீமிற்கு பாஸ்கெட் பால் பயிற்சி கொடுக்க நியமிக்கப்படுகிறார். அந்த டீமை அவர் ஜெயிக்க வைத்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை. இதில் பயிற்சி கொடுக்கும் பாஸ்கெட் பால் கோச்சாக ஆமிர்கான் நடித்துள்ளார். இப்படம் இந்தியை தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. இந்தியில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தினை ஓடிடி தளங்களுக்கு விற்காமல் யூட்யூபில் வெளியிட திட்டமிட்டுள்ளார் ஆமிர்கான். அதன் படி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இப்படம் இந்தியாவில் யூட்யூபில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 100 ரூபாய் கட்டணம் செலுத்தி பார்த்துக் கொள்ளலாம். இது தொடர்பாக பேசிய ஆமிர் கான், “கடந்த 15 வருடங்களாக, திரையரங்குகளுக்கு பல்வேறு காரணமாக போகாமல் இருக்கும் மக்களை எப்படி சென்றடைவது என்ற சவாலில் நான் போராடி வந்தேன். இறுதியாக, அதற்கான நேரம் வந்துவிட்டது. சினிமா அனைவரையும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும். இது தான் என் கனவு. மக்கள் எப்போது எங்கு வேண்டுமானாலும் சினிமாவை எளிதாக்க பார்க்க வேண்டும்” என்றுள்ளார்.