ADVERTISEMENT

வைரலான வீடியோ - வழக்கு தொடுத்து அவசர விளக்கமளித்த அமீர்கான்

03:45 PM Apr 16, 2024 | kavidhasan@nak…

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் திரைபிரபலங்களும் கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதனிடையே கடந்த வாரம் லியோ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. ஆனால் அத்தகவலை சஞ்சய் தத் மறுத்திருந்தார். இந்த நிலையில் மற்றொரு பாலிவுட் முன்னணி நடிகரான அமீர் கான், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து அமீர் கான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமீர் கானின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது, “அமீர் கான் தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளித்ததில்லை. கடந்த பல தேர்தல்களில் தேர்தல் கமிஷன் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முயற்சிகளை எடுத்துள்ளார். அமீர் கான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி சமீபத்தில் வைரலான வீடியோவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது போலியான வீடியோ என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமீர் தெளிவுபடுத்த விரும்புகிறார்.

மேலும் அனைத்து இந்தியர்களையும் வெளியே வந்து வாக்களிக்குமாறும், நமது தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்கிறார். அமீர் கானின் அந்த வைரல் வீடியோ, ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு அவர் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை. அதை ஏ.ஐ மூலம் எடிட் செய்துள்ளனர்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT