டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வீடு அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் மேலும் நடவடிக்கை எடுக்க தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில், நீதிமன்ற தடை உத்தரவை மீறி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை உயர் அதிகாரி நோட்டிஸ் அனுப்பியதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி நோட்டிஸ் எப்படி அனுப்பப்பட்டது என அமலாக்கத்துறை தரப்பிடம் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இதற்கு வேண்டுமென்றே உத்தரவை மீறவில்லை என்றும் தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. பின்பு நீதிபதிகள், அமலாக்கத்துறை நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. விருப்பப்பட்டால் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என தெரிவித்தனர்.