ADVERTISEMENT

“இந்த நிலையில் எங்களை மீட்பது முக்கியக் கவலையாக இருக்காது”- ப்ருத்வி ராஜ் உருக்கம்

10:41 AM Apr 02, 2020 | santhoshkumar


ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ருத்வி ராஜ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் மலையாளத்தில் உருவாகும் படம் 'ஆடுஜீவிதம்'. பெனியமின் என்ற எழுத்தாளரால் உருவான ஆடுஜீவிதம் என்ற பிரபல நாவலை மையமாக வைத்துதான் இப்படம் உருவாகி வருகிறது. கேரளாவைச் சேர்ந்த நஜீப்என்பவர், அதிகம் சம்பாதிக்கலாம் என நினைத்து அரபு தேசம் செல்கிறார். ஆனால், அங்கு அவர் கொத்தடைமையாக்கப்பட்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து, அங்கிருந்து எப்படித் தாயகம் திரும்பினார் என்பதுதான் கதை. இதில் நஜீப் கதாபாத்திரத்தில் ப்ருத்வி ராஜ் நடிக்க, சவுண்ட் டிசைனராக ரஸுல் பூக்குட்டி உதவி செய்ய, படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பல வருடங்கள் கழித்து மலையாள சினிமாத்துறையில் மீண்டும் இப்படத்தின் மூலம் பணிபுரிகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இப்படத்தின் ஷூட்டிங் ஜோர்டான் நாட்டிலுள்ள வாடிரம் பாலைவனத்தில் நடைபெற்று வந்தது. கரோனா அச்சத்தால் ஜோர்டான் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இப்படக்குழு இந்தியாவுக்கும் திரும்ப முடியாமல், ஷூட்டிங்கும் எடுக்க முடியாமல் பாலைவன டென்ட்களில் சிக்கித்தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ப்ளெஸ்ஸி, தன்னுடன் இருக்கும் படக்குழுவைச் சேர்ந்த 58 பேரையும் மீட்கக்கோரி கேரள இயக்குனர் சங்கத்திற்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் ஒப்படத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ப்ருத்வி ராஜ் உருக்கமான பதிவு ஒன்றை ஜோர்டானிலிருந்து பதிவிட்டுள்ளார். அதில், “எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒரு முறை அவர் எங்கள் ஒவ்வொருவரையும் பரிசோதிக்கிறார்.மேலும்,ஜோர்டான் அரசாங்கம் நியமித்துள்ள மருத்துவரும் அவ்வப்போது எங்களைப் பரிசோதிக்கிறார்.

தற்போது உலகில் இருக்கும் நிலையில் எங்கள் குழுவில் இருக்கும் 58 பேரை மீட்பது என்பது இந்திய அதிகாரிகளின் முக்கியக் கவலையாக இருக்காது என்பதை என்னால் முழுவதும் புரிந்துகொள்ள முடிகிறது. அது சரியும் கூட.எங்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களுக்கு நடப்பது என்ன என்பதைத் தெரிவிப்பது எங்கள் கடமை என்று நினைத்தோம்.

உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பக் காத்துக்கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எப்போது சரியான நேரமும், வாய்ப்பும் வருகிறதோ அப்போது நாங்களும் இந்தியா திரும்புவோம் என நம்புகிறேன். அதுவரை, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். நாம் அனைவரும் இணைந்து, மீண்டும் வாழ்க்கை சகஜமாக மாறும் என்று நம்புவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT