Advertisment

“படப்பிடிப்பு சமயங்களில் சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தோம்” - ஆதி

aadhi speech about Sabdham

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் நாளை(28.02.2025) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் ஆதி தனது கதாபாத்திரம் குறித்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நடிகர் ஆதி பேசும்போது, “ஈரம் படத்தை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் உடன் இணைந்துள்ள படம் இது. எனது இரண்டாவது படமே அறிவழகன் சாருடன் தான். அந்த படம் உருவான சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களே வித்தியாசமாக இருந்தது. அதனால் இந்த முறை சேர்ந்து பணியாற்றும் போது இருவருக்கும் ஒரு புரிதல் இருந்தது. அவர் காட்சிகளை உருவாக்கும் விதம், சின்ன சின்ன நுணுக்கங்களை மேற்கொள்வது எல்லாவற்றையும் அழகாக செய்வார். ஈரம் முடிந்த பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அடிக்கடி சில கதைகள் பேசுவோம். ஆனால் அதற்கான ஒரு சரியான டீம் அமையவில்லை. இந்த படத்திற்கு அது சரியாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் கொஞ்சம் விரைவாக பண்ண வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. குறிப்பாக அறிவழகன் உடன் இணைந்து அடுத்தடுத்து பணியாற்ற விரும்புகிறேன்.

Advertisment

லட்சுமி மேனனும் நானும் இந்த படத்தில் நெருக்கமாக நடித்திருந்தாலும் அது மனதளவில் தானே தவிர உடல் ரீதியாக அல்ல.. ஏனென்றால் அப்படி ஒரு காட்சி இந்த படத்திற்கு தேவைப்படவில்லை.. இந்த படம் காதல் படம் அல்ல.. ஆனால் காதலும் இருக்கும்.. லட்சுமி மேனன் மட்டுமல்ல.. சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்புமே இந்த படத்தில் முக்கியமானது. இந்த படத்தில் அமானுஷ்யங்களை ஆராய்ச்சி செய்யும் பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்திய சினிமாவில் இதுவரை இந்த கதாபாத்திரம் வந்ததில்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள். அப்படி யாருமே இதுவரை பண்ணாத ஒரு கதாபாத்திரம் செய்யும்போது அது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். இதுகுறித்த விஷயங்களை அறிவழகன் ஆய்வு செய்து என்னிடம் விளக்கி சொன்னபோது ரொம்பவே சுவாரசியமாக இருந்தது.

கௌரவ் திவாரி என்கிற பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் இருந்தார். அவர் இப்போது இல்லை. அவரது மரணம் கூட இதுவரை மர்மமாகவே இருக்கிறது. அவரைப் பற்றி நிறைய படித்தேன். நிறைய வீடியோக்கள் பார்த்தேன். ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. ஒரு இடத்தில் அவருடைய வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையும் கூட பொருந்தி போனது. அவரைப் போலவே நானும் பைலட் பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.. அவர் அப்படி பைலட் பயிற்சி எடுக்க சென்ற இடத்தில் தான் பாராநார்மல் நடவடிக்கைகளை உணர்ந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் அது பற்றி படிக்க வேண்டும் என நினைத்து அதில் முழுமூச்சுடன் இறங்கி மும்பையில் அலுவலகம் அமைத்து நிறைய விசாரணைகளை அவர் செய்திருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் கூட சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தோம். அது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது. உடனே மற்றவர்களையும் உஷார்படுத்தி சீக்கிரமாக படப்பிடிப்பை நடத்தி விட்டு கிளம்புவோம். நேற்று ஒரு டீம் இன்டர்வியூ நடைபெற்றபோது கூட அங்கு அந்த அமானுஷ்யத்தை உணர முடிந்தது. சில நாட்களிலேயே இது கொஞ்சம் பழகிவிட்டது என்று சொல்லலாம். ஈரம் படத்தில் பணியாற்றும்போது எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை இல்லை. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக சில ஆராய்ச்சிகளை நான் படிக்கும்போது, வீடியோக்களை பார்க்கும்போது அமானுஷ்ய விஷயங்கள் இருக்கலாம் என ஒரளவுக்கு நம்பத்தான் தோன்றுகிறது.

ஹீரோவா, வில்லனா எது அதிக விருப்பம் என்று கேட்டால் ஹீரோவை விட வில்லனாக நடிப்பதற்கு தான் விருப்பம். அந்த கதாபாத்திரத்துக்கு என பெரிதாக எல்லைகள் எதுவும் இருக்காது என்பதால் வில்லனாக நடிப்பது ஒரு சுவாரஸ்யம் தான். அஜித் விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்க ஆசை.. இருந்தாலும் கதை தானே அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஹீரோவே சில படங்களில் வில்லன் போல தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் தானே பிடிக்கிறது. ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ அதைத்தானே கொடுக்க வேண்டும்.

வெற்றி அடைந்த படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பது தவறில்லை. ஆனால் நல்ல கதை இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முதல் பாகத்தின் பெருமையை குறைத்தது போல் ஆகிவிடும். மிருகம் இரண்டாம் பாகத்திற்காக என்னிடம் வந்தார்கள். அவர்கள் சொன்ன கதையில் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. அதனால் மறுத்து விட்டேன் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளலாமா என்றார்கள். உங்கள் விருப்பம் என சொல்லி விட்டேன். டைரக்ஷனில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தை டைரக்ஷன் பண்ணும் அளவிற்கு பொறுமை இல்லை. அது ரொம்பவே மன அழுத்தம் தரக்கூடியது. அதனால் நடிப்பு மட்டுமே இப்போதைக்கு போகும்” என்றார்.

director arivazhagan Actor aadhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe