ஆர்ஜின் ஸ்டுடியோஸ், சார்பில் கண்ணதாசன் தயாரிப்பில் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் 96 ஜோடி ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் நடிப்பில் புதுப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. புரொடக்‌ஷன் நம்பர் 1, என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய  வேடமொன்றில் இதில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி, 
டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள். 

Advertisment

இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட்  இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர்.  குட் நைட், லவ்வர் ,  டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது, “இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது.

90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று சொல்கிறார்கள்.. 
இவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் முழுமையாகப் பிறந்த முதல் தலைமுறை மற்றும் கோவிட் 19, தொற்றுநோய் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை அனுபவித்தவர்கள். சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் உறவுகள் என்பது வேர்களில் இருந்து கற்றுக் கொள்ளப்படாமல் அதை விட்டு விலகிய நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னொருவர் கருத்தை ஒத்து கொள்வதை தாண்டி அதை கேட்க கூட யாரும் தயாராக இருப்பதில்லை. ஆனால் அடிப்படையான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த தறைமுறையாயிருப்பினும் அதன் ரூட் அதாவது வேர்  என்பது முக்கியம். வேர்களை விட்டு விலகாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதுவே அடுத்த தறைமுறையினரின் மீட்சியாக இருக்கும். 

சிந்தனைகளிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் அட்வான்சாக வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினர் காலம் காலமாக இருந்து வரும் மனிதர்களின் இயல்பான சில நல்ல விஷயங்களை கற்று கொள்ளாமல், கற்று கொடுக்க படாமல் இருப்பதை மனதில் கொண்டு அதை கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. அலட்டி கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன்.., குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை” என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி,  நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது.   இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.