Skip to main content

2021 இல் ‘ஆயிரத்தில் ஒருவன்-2’; 2023 இல் ‘7ஜி ரெயின்போ காலனி-2’

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

7g rainbow colony 2 update producer am rathanm confirms in interview

 

இயக்குநர் செல்வராகவன் தன் ஆரம்பக்காலங்களில் இயக்கிய படங்கள் காலத்தைத் தாண்டி பேசப்படுவதாக இருக்கின்றன. 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மேலும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இரண்டு படங்களும் ரீ-ரிலீஸும் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே 'ஆயிரத்தில் ஒருவன் 2' உருவாவதாகவும், அதில் தனுஷ் நடிப்பதாகவும் கடந்த 2021 ஆம் புத்தாண்டு செய்தியாக செல்வராகவன் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், செல்வராகவனின் '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இதில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு செய்தியாக அமைந்துள்ளது.

 

செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் '7ஜி ரெயின்போ காலனி'. ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் செல்வராகவன் வாழ்ந்த ஒரு குடியிருப்பில் நடந்த உண்மைச் சம்பவம் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கடைசியாக தனுஷ் நடித்த 'நானே வருவேன்' படத்தை இயக்கிய செல்வராகவன், அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணியில் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் எந்தப் படம் என்பதைப் பற்றி குறிப்பிடவில்லை. 

 

 

 

சார்ந்த செய்திகள்