/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/59_20.jpg)
தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், கதையாசிரியர், நடனக்கலைஞர், பாடகர் என கிட்டத்தட்ட அனைத்துத்துறைகளிலும் பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கமல்ஹாசன். இதுவரை 233 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் அதிக தேசிய விருது வாங்கிய நடிகர் என்ற பெருமையைத்தக்கவைத்து வருகிறார். இந்திய அரசின் உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வாங்கியஇவர். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதையும் வாங்கியுள்ளார். இதனிடையே 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சி தொடங்கி அதனை வழி நடத்தியும் வருகிறார்.
இந்நிலையில் தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் கமல்ஹாசன். இதனை முன்னிட்டு அவரது தொண்டர்கள் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொண்டு, பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசுகையில், "பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்குப் பெரிய நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். அந்த ஒருநாள் தான் பிறந்தநாள். ஆனால்இதனைப் பெரிய கூட்டம் கூடிப் பண்ணுவதற்குக் காரணம், என் தோழர்களுக்கு இதை ஒரு காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்வதை வலியுறுத்தும் ஒரு வாய்ப்பாக நான் பார்க்கிறேன். இன்று பல இடங்களில் எனது ரசிகர்கள் நற்பணிகள் செய்து கொண்டு வருகிறார்கள்.
மய்யத்தின் சகோதரர்கள் அமெரிக்காவில் இருந்தும் சிறிய குக்கிராமங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 68 பள்ளிகளுக்குக் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். கழிப்பறைகள் முக்கியமா எனக் கேட்டால், அதுவும் முக்கியம் தான்.அதாவது சுடுகாடும் முக்கியம், பிரசவம் பார்த்து சிகிச்சை பெரும் மருத்துவமனையும் முக்கியம். இது போன்ற நற்பணிகள் எல்லாம் நான் செய்ய வேண்டிய கடமைகள். எந்தப் பிரச்சனைக்கும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதை விட நாம் அனைவருமே களத்தில் இறங்கி சரி செய்தால் அதுவே பெரிய நற்பணி. அதுவே ஒரு தேச சேவை. அந்த சேவையை 40 ஆண்டுகளாக என் தோழர்களை பழக்கி, அதனை அடுத்தகட்ட பயணத்திற்கும் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்.
எல்லாவற்றையும் கடந்து இன்றைய நாள் என்பதுஅவர்கள் இந்தியர்களாக, தமிழர்களாக நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் நாள். அதனை நினைவு கோரும் நாளாக பார்க்கிறேன். அதற்கு உறுதுணையாக நிற்பதே நான் பிறந்ததற்கான காரணம் என நான் நம்புகிறேன்" என்றார் கமல்ஹாசன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)