Advertisment

30 ஆண்டுகள்; 575 படங்கள் - மக்கள் தொடர்பில் புதுமை புகுத்திய நிகில் முருகன்!

Ni

தென்னிந்திய சினிமா மக்கள் தொடர்பு துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாளராக இருந்து வருபவர் நிகில் முருகன். சமீபத்தில் இவருக்கு தமிழ அரசு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.

Advertisment

30 ஆண்டுகளாக 575-க்கும் திரைப்படங்களுக்கும் மேல் மக்கள் தொடர்பாளராக தொடர்ந்து பணியாற்றி வரும் நிகில் முருகன், தென்னிந்திய பொழுதுபோக்கு துறையில் தவிர்க்க முடியாதவராக திகழ்கிறார். அளவில்லாத அர்ப்பணிப்பு, துடிப்பான தகவல் தொடர்பு திறன் மற்றும் சினிமா மீதான அபரிதமான ஆர்வம் ஆகியவற்றின் கலவையாக அறியப்படும் நிகில் முருகன், இந்திய சினிமாவில் மக்கள் தொடர்பு அலுவலரின் (PRO) பணியில் பல புதுமைகளை புகுத்தியுள்ளார்.

Advertisment

மக்கள் தொடர்புத் துறையின் முன்னோடியான சினி நியூஸ் செல்வத்தின் உதவியாளராக 1988ம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை நிகில் முருகன் தொடங்கினார். 1997ம் ஆண்டு உல்லாசம் (ABCL தயாரிப்பு) திரைப்படத்தின் மூலம் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்ற தொடங்கினார். முதல்வன், பாபா, பிதாமகன், பருத்திவீரன், தசாவதாரம், எந்திரன், கோட், டிராகன் உள்ளிட்ட பல மைல்கல் திரைப்படங்களின் மக்கள் தொடர்பு பணியை அவர் திறம்பட செய்துள்ளார்.

கே. பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், பாலா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற ஜாம்பவான்களுடனான நிகிலின் தொடர்பு, திரைத்துறையில் அவர் பெற்றுள்ள நம்பிக்கையையும் மரியாதையையும் எடுத்துக்காட்டுகிறது. ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்கார் விருது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, ஜாக்கி சான் பங்கேற்ற தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழா, அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கலந்து கொண்ட ஐ ஆடியோ வெளியீட்டு விழா போன்ற முக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

மார்ச் 23, 1967 அன்று சென்னையில் பிறந்த நிகில் முருகன், பொது சேவை மற்றும் பத்திரிகைத் துறையில் ஆழமாக வேரூன்றிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரபல தமிழ் நாளிதழான தினமணியின் முதல் ஆசிரியரான திரு டி.எஸ். சொக்கலிங்கத்தின் கொள்ளுப் பேரன் தான் நிகில் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகால நிதி நெருக்கடிகள் இருந்த காரணத்தினால் பள்ளி நாட்களில் செய்தித்தாள் விநியோகப் பணியாளராகவும் கடை உதவியாளராகவும் பணிபுரிந்த நிகில் கல்வியை விடாமுயற்சியுடன் தொடர்ந்தார், பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் டிப்ளோமா பெற்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பேசும் நிகிலின் மொழியியல் பன்முகத்தன்மை தென்னிந்திய திரைப்பட துறைகளுக்கு இடையே வலுவான பாலங்களை உருவாக்க அவருக்கு உதவியது.

24 மணி நேரமும் எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய தன்மை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பணிகளை நேர்த்தியுடன் திறம்பட செய்யும் திறனுக்காக நிகில் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

சிறுவனாக செய்தித்தாள்களை விநியோகிப்பதில் தொடங்கி தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் மக்கள் தொடர்பாளராக வளர்ந்தது வரை, நிகில் முருகனின் பயணம் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மீது கட்டமைக்கப்பட்டது ஆகும்.கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையில் வெற்றிகரமாக வலம் வரும் அவரது பயணம் அனைத்து தரப்பினருக்கும் ஊக்கமளிப்பதாக திகழ்கிறது.

pro nikil murugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe