Skip to main content

இந்த வருடம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கூடுதல் ஸ்பெஷல்... காரணம் இதுதான்!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

Sivakarthikeyan

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'ஹீரோ'. அப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்த 'டாக்டர்' திரைப்படம், மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

 

நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ‘அயலான்’ திரைப்படத்தின் பணிகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள 'அயலான்' படக்குழு, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பின் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால் பின்தயாரிப்பு பணிகள் நிறைவடைய இவ்வருட இறுதிவரைக் காலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இவ்வருடத்தின் இறுதியில் திரைக்கு கொண்டுவர தயாரிப்பு தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.

 

அட்லியின் உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் 'டான்' படத்திலும் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று (11.02.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது. சமுத்திரக்கனி, சூரி, எஸ்.ஜே.சூர்யா என நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.கே. புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தை, விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி திரைக்குக் கொண்டுவர தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதில், 'டாக்டர்' படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள இரு படங்களின் பணிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் பட்சத்தில் இவ்வருடத்திற்கான சிவகார்த்திகேயனின் ரிலீஸ் பட்டியலில் மொத்தம் 3 படங்கள் இடம்பெறும். இந்த வருடம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கூடுதல் ஸ்பெஷல்தான்!

 

சார்ந்த செய்திகள்