
சென்ற வருடம் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமான காலா, 2.0 படங்கள் வெளியாயின. விஜயின் சர்கார் படம் வெளியானது. கடந்த வருடம் ஜனவரியில் தானா சேர்ந்த கூட்டம் வெளியானதை அடுத்து சூர்யாவின் படம் வேறு எதுவும் வெளியாகவே இல்லை, தீபாவளிக்கு என்ஜிகே படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போதுதான் அப்படத்தின் மூன்றாம் கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. 2017 ஆண்டு வெளியான விவேகம் படத்தை தொடர்ந்து கடந்த வருடத்தில் அஜித்தின் படம் எதுவும் ரிலிஸே ஆகவில்லை. தமிழ் சினிமாவின் உட்சபட்ச நட்சத்திரங்களான இவர்களில் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே கடந்த வருடம் சிறப்பாக அமைந்தது. இந்த வருடமும் ஒருசில நட்சத்திரங்களின் ரசிகர்கள் மட்டுமே கொண்டாடுவார்களா என்று நினைக்க வேண்டாம். இந்த வருடம் அனைத்து நட்சத்திரங்களின் படமும் திரைக்கு வர இருக்கிறது. அனைத்து ரசிகர்களும் அதை கொண்டாட ரெடியா இருங்க...
தமிழ் சினிமாவில் இரண்டு பண்டிகைகளில் ரிலிஸாகும் படங்களுக்குதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும், அந்த வகையில் இந்த வருடம் பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் பேட்ட படமும், அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் ஜனவரி 10ஆம் தேதி ரிலிஸாக இருக்கிறது. நடிகர் அஜித்தின் படத்தை கடந்த ஒன்றரை வருடமாக திரையில் பார்க்காமல் இருந்து வந்த அவரது ரசிகர்களுக்கு இந்த வருடம் ஸ்பெஷலான வருடம்தான். ஜனவரியில் அஜித்தின் விஸ்வாசம் ரிலிஸானவுடன், மே மாதமே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஹிந்தி படமான பிங்க் படம் தமிழில் ரிமேக் செய்து ரிலிஸாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹிந்தியில் ஹமிதாப் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். ரஜினியும் பேட்ட ரிலிஸானவுடன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அதுவும் இந்த வருட தீபாவளிக்குள் ரிலிஸாகும் என்று சொல்லப்படுகிறது.
என்ஜிகே ஷூட்டிங் தள்ளிப்போனதை அடுத்து, இடைப்பட்ட காலவேலையில் சூர்யா நடிக்க தொடங்கிய கே.வி. ஆனந்த படத்திற்கு காப்பான் என பெயரிட்டுள்ளது படக்குழு. இந்த வருடமே இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரிக்கு பின்னர் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான விஷயம் எதுவும் நிகழவே இல்லை, அதற்கு ஈடுகட்டும் விதமாக இந்த வருடம் அவர்களுக்கு டபுள் டமாக்காவாக இருக்கப்போகிறது.

நடிகர் விக்ரமுக்கு கடந்த ஆண்டு ஸ்கெட்ச் படம் வெளியானது. ஆனால், அது அவருடைய ரசிகர்களின் டேஸ்டுக்கு ஏற்றார்போல் இல்லை. விக்ரமிடம் இருந்த எதிர்பார்க்கப்படும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள துருவ நட்சத்திரம், கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ளது. இது அல்லாமல் கர்ணன் என்னும் படம் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த வருடம் தொடங்க இருக்கிறது, அப்படத்தின் கதாநாயகனாக விக்ரம்தான் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படமும் இந்த வருடம் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடத்தை போலவே விஜய் இந்த வருடமும் தீபாவளி பண்டிகையை தன்வசமாக்க இருப்பதாக திரையுலகில் சொல்லபடுகிறது. இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் படம் இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது படக்குழு.
இந்த வருட பொங்கலுக்கு ரிலிஸாகும் என்று சொல்லப்பட்ட சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் அடுத்த ஃபிப்ரவரியில் வெளியாகும் என்கின்றனர். தனுஷ் ஐந்து படங்களுக்கு ஒப்புதல் ஆகியுள்ளார். அதில் அசூரன் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் அசூரன் ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜேஷ் இணைந்து எடுக்கப்படும் எஸ்கே13 ஏப்ரல் மாதத்தில் வெளியாகுமாம், பெரிய பட்ஜெட்டில் உருவாகிகொண்டிருக்கும் எஸ்கே14 இந்த வருட இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. வருடத்தில் மாதா மாதம் விஜய் சேதுபதியின் படம் ஒன்று ரிலிஸாகிவிடும், அதுபோல இந்த வருடம் விஜய் சேதுபதி நடித்து முடித்த படங்களே நான்கு படம் இருக்கிறது, அதில் ஒன்று ரஜினியுடன் பேட்ட படம் ஜனவரி 10 வெளியாகிறது. இது அல்லாமல் மூன்று படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஆக, இந்த வருடத்தில் மூன்று படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.