நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த வருடத்தில் வெளியாகிவிட்டன. அதில் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதியும். தமிழ் சினிமா வரலாற்றில் 'பராசக்தி' குணசேகரன், 'ஆயிரத்தில் ஒருவன்' மணிமாறன், 'நாயகன்' வேலுநாயக்கர், 'பாட்ஷா' மாணிக்கம், 'அமர்க்களம்' வாசு, 'கில்லி' வேலு மட்டும் நம் நினைவில் நிற்கும் பாத்திரங்கள் அல்ல. 'பதினாறு வயதினிலே' பரட்டை, 'வேதம் புதிது'வில் பாலுத்தேவர் சத்யராஜைக் கேள்விகேட்கும் குட்டிப்பையன், 'தில்லுமுல்லு'வில் ரஜினியை வம்பிழுக்கும் சின்னப் பையன், 'திருவிளையாடல்' தருமி, 'பூவே உனக்காக'வில் மீசை முருகேஷ் பாத்திரம், 'முதல் மரியாதை'யில் எனக்கு ஒரு உண்ம தெரியணும்' என கேட்கும் பாத்திரம், இப்படி நீண்டு கொண்டே செல்லும் லிஸ்ட்டில் 'திரிஷா இல்லைன்னா நயன்தாரா' செங்கல் சைக்கோ காலம் வரை நம் மனதில் பதிந்த, நம்மை கவனிக்க வைத்த பாத்திரங்கள் ஏராளம். அப்படி இந்த ஆண்டு ரசிகர்களைக் கவர்ந்த பாத்திரங்கள், சோசியல் மீடியாவின் டார்லிங்குகளாகத் திகழ்ந்த கேரக்டர்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
டோனி, லக்ஷ்மணகுமார்

நயன்தாராவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இந்த வருடத்தில் வெளியான இரண்டு படங்களில் 'கோலமாவு கோகிலா'வும் ஒன்று. இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு போன்று பிரபலமானவர்கள் இருந்தும் மேலும் இரண்டு பேர் இந்தப் படத்தில் நம் கவனத்தை கவர்ந்தனர். 'அக்கா மேட்டர்ல முக்கா போயிட்ட' என்று சொல்லிக்கொண்டே இருக்கும் டோனியைப் பார்த்து சிரிக்காதவர்களே இல்லை. இவரைப்போல இந்தப் படத்தில் நயன்தாரா தங்கையின் மீது காதலில் விழுந்தவராய் நடித்த 'ஸ்மைல் சேட்டை' அன்புதாஸும் அனைவரையும் தனது நடிப்புத் திறமையால் ஈர்த்தார்.
கிறிஸ்டோபர், அம்மு, இன்பராஜ்

இந்த வருடத்தின் ஐஎம்டிபி இந்தியா ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் படம் 'ராட்சசன்'. இதில் நடித்த பலரும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். குறிப்பாக கிறிஸ்டோபர் என்னும் டெரரான கேரக்டரில் படத்தில் குறைந்த சீன்களே வந்தாலும், பார்வையாளர்களை மிரட்டியிருந்தார் சரவணன். அந்தப் பாத்திரத்தை பார்த்தால் வரும் ஒரு பதற்றம் படத்தைத் தூக்கி நிறுத்தியது. பிரபலம் இல்லாத முகம், படத்திலும் கூட முழு மேக்கப், படம் ரிலீஸாகி யார் அந்த கதாபாத்திரத்தில் நடித்தது என்று பலரையும் கேட்க வைத்து அவரை அறிமுகம் செய்ய ஒரு விழா வைத்தது படக்குழு. இதே படத்தில் 'அம்மு' என்ற கதாபாத்திரத்தில் நடித்த பெண் பல இளைஞர்களின் க்ரஷாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரின் முட்டைக் கண்ணை பார்த்து, மெர்சலாகி இருக்கிறார்கள். இன்பராஜ், இந்தப் படத்தில் வரும் மோசமான வாத்தியார் கதாபாத்திரம், பார்ப்பவர்களை கடுப்பாகி அடித்து நொறுக்கலாம் என்று தோன்றவைக்கும் ஒரு கதாபாத்திரம். அதை இவர் கனகச்சிதமாக நடித்து தன்னை நிரூபித்தார்.
'குட்டி' ஜானு

பள்ளிப் பருவத் தோழிகளை நியாபகப்படுத்தி, பார்வையாளர்களின் பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றவர் 96 படத்தில் நடித்த ஜானு. இந்தப் படத்தில் ஜானகியின் பாடல்களை பாடும்போது, அவருடைய கண்ணசைவிலும், சிமிட்டல்களாலும், குறும்பாலும் ரசிகர்களைக் கிறங்க வைத்தவர். படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா என இருபெரும் நடிகர்கள் நடித்திருந்தாலும், குட்டி ஜானுவின் நடிப்பு அபாரமாகவே இருந்தது. இவரின் நடிப்பு மட்டுமல்ல அந்தப் படத்தில் பள்ளிப் பருவ கதாபாத்திரத்தில் நடித்த அனைவரின் நடிப்புமே அனைவராலும் ரசிக்கப்பட்டது.
'மர்டர்' தாத்தா, ஆனந்த்
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி தமிழகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்ற படங்களில் ஒன்று பரியேறும் பெருமாள். திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமத்தில் நடக்கும் சாதிய பாகுபாடுகளை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஒரு கதாப்பாத்திரமாக பல சீன்களில் வரும் தாத்தா கதாபாத்திரம் தன்னுடைய நடிப்பால் பார்ப்பவர்களுக்கு அச்சத்தைத் தந்திருக்கிறார். சாதிக்காகப் போகிற போக்கில் சில பல கொலைகளை எளிய முறையில் செய்யும் கதாபாத்திரத்தை அசால்ட்டாக நடித்திருப்பார் வெங்கடேஷன். சமூக வலைதளத்தில் கூட மீம்களில் இவருடைய படங்கள் வலம் வந்தன. அதேபோல கவுன்சிலரின் மகனாக, இங்கிலிஷ் சரியாக வராத டிபிகல் கிராமத்து மாணவனாக, எந்த சாதியாக இருந்தாலும் எனக்கு நண்பன் என்று நடித்த யோகிபாபுவும் இதில் சேர்க்கப்பட வேண்டும். யோகி பாபுவை காமெடியனாகவே பார்த்த நமக்கு இதில் அவர் நடித்த பாத்திரம் நெகிழவும் வைத்தது.
'இஅமுகு' யாஷிகா
'அடல்ட் காமெடி ஹாரர் பிலிம்' என்று சொல்லிக்கொண்டு வெளியான 'இருட்டு அரையில் முரட்டு குத்து' படத்தில் நடித்த யாஷிகா கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தன் வசம் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்ந்து செம பேமஸானார். தற்போது பல பட வாய்ப்புகள் வருகிறதாம்.
'வடசென்னை' கண்ணா

'மச்சானு வந்தா இப்படி ஒரு மச்சான்தான் வரணும்'னு வடசென்னை படத்தை பார்த்தவுடன் அனைவரையும் யோசிக்கவைத்தவர் வடசென்னை அன்பு கதாபாத்திரத்திற்கு மச்சனாக வரும் கண்ணன்தான். அதிலும் தனுஷ் வீட்டுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை பொண்ணு பார்க்க வரும் சீனெல்லாம் செம்மையாகப் பேசப்பட்டது. தன் அப்பாவையே அடிப்பது தவறான செயல். என்றாலும் ரசிகர்களுக்குப் பிடித்தது. ஆனால், நன்றாக நடித்ததால் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.
கடன்கார ரங்கசாமி
வீட்டையும் வண்டியையும் கடனாக வாங்குவது கடமையாக மாறிவிட்ட இந்தக் காலத்திலும் எந்த வேலைக்கும் போகாமல் அன்றாட செலவுக்காகக் கடன் வாங்குபவர்கள் அசிங்கமாகவே பார்க்கப்படுகிறார்கள். அப்படி குடிப்பதற்காகவோ, அல்லது உணவுக்காகவோ அல்லது ஏதேனும் ஒரு கடன் வாங்கியே வாழ்க்கையை ஓட்டும் அப்பா ரங்கசாமியாக, எந்தத் தயக்கமும் இல்லாமல் எத்தனை வயதிலும் கடன் வாங்கும் பலரின் உருவமாக நடித்திருந்தார் டெல்லி கணேஷ். அவ்வை ஷண்முகி போன்ற படங்களில் இவர் நடித்த பாத்திரங்கள் பேசப்பட்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஷாலின் அப்பாவாக இவர் நடித்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
மாபாதகன் சமயன்
வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகளையும் சீண்டும் காம மிருகங்கள் குறித்த செய்திகளை தினமும் நாம் கடக்கிறோம். அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மிடையேதான் இருக்கிறார்கள். நம்மைப் போலவேதான் இருக்கிறார்கள். எந்த அறிகுறியும் காட்டாமல் மறைந்து இருக்கிறார்கள். அப்படி ஒரு கேரக்டர்தான் 'அசுரவதம்' சமயன். மாமனார் வைத்துக் கொடுத்த கடையை நடத்திக்கொண்டு, நாமறிந்த அத்தனை கெட்ட பழக்கங்களுடனும் ஊரில் ஒரு மனிதனாக வாழும் பாத்திரம். கொலை செய்யப்படுவோம் என்ற பயத்தில் வெட்கம் விட்டு ஆட்களை சேர்த்துக்கொண்டு இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் போது நடிப்பில் பின்னியிருந்தார் சமயனாக நடித்த வசுமித்ர. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் குறைவு என்றாலும், பார்த்த யாரும் இந்தப் பாத்திரத்தை மறக்கமாட்டார்கள்.
மலையெங்கும் நம் மனிதர்கள்
ரங்கசாமி தொடங்கி விற்கப் போகும் நிலத்துக்கு அட்வான்ஸ் வாங்க மறுக்கும் நிலவுரிமையாளர், உரிமையுடன் உதவும் பாய், பரிவான கங்காணி, கிறுக்குக்கிழவி, வாழ்க்கையின் கடைசி வரை வைராக்கியமாக மூட்டை தூக்கும் பெரியவர்.. இப்படி 'மேற்குத் தொடர்ச்சி மலை'யெங்கும் மனதைத் திருடிய பாத்திரங்கள்தான். அந்தப் பகுதியில் வாழும் உண்மை மனிதர்களையே நடிக்கவைத்து படத்தை மேலும் நெருக்கமாகியிருந்தார் இயக்குனர் லெனின் பாரதி.
'கனா' காதலன் முரளிக்கிருஷ்ணா

வருடத்தின் இறுதியில் கூட்டத்தோடு போட்டியில் வெளிவந்து முதல் ஆளாக ரசிகர்கள் மனதை வென்ற படம் 'கனா'. தன் தந்தையை மகிழ்ச்சிப்படுத்த கிரிக்கெட் ஆடவேண்டும் என்ற லட்சியத்தோடு கௌசி ஒரு பக்கம், விவசாயம், கிரிக்கெட், மகள் பாசம் என முருகேசன் ஒரு பக்கம் தான் சாதிக்காததைத் தன் அணியை வைத்து சாதிக்கும் பயிற்சியாளர் நெல்சன் திலீப் குமார் என முக்கிய பாத்திரங்களுக்கு இடையே நம்மை கவர்ந்தது ஒரு தலையாகக் காதல் செய்தாலும் அவளது லட்சியத்துக்கு அவளுக்கே தெரியாமல் உதவும், அவரது தந்தை மனமுடைந்து நிற்கும்போது உதவி என அவரை நிற்கவைக்காமல் துணைநிற்கும் 'கனா' காதலன் MK டிராவல்ஸ் முரளிக்கிருஷ்ணாவாக நடித்திருப்பவர் தர்ஷன். யதார்த்தமான காதலராக ஈர்க்கிறார்.