Skip to main content

நேசமணியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்! 

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

நம்ம வைகைப்புயல் வடிவேலுக்கு ட்ரென்டிங் ஒன்னும் புதுசில்ல. சினிமால நடிக்குறாரோ இல்லையோ.. சோஷியல் மீடியால என்னைக்கு ட்ரென்டிங் நம்ம வடிவேலுதான். ஆனா இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமா ட்ரென்டிங் ஆகிருக்காரு நம்ம வடிவேலு. அவர் பண்ண ரோல்ஸ்ல நம்மளால மறக்க முடியாத ஒரு ரோல், கான்ட்ராக்டர் நேசமணி ரோல். ப்ரெண்ட்ஸ் படத்துல வந்த இந்த காமெடிக்கு சிரிக்காதவங்க யாரும் இருந்துருக்க முடியாது.

 

vadi

 

அந்தளவுக்கு வடிவேலு வர்ற ஒவ்வொரு சீனுமே காமெடி தெறிக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்க்கைல முன்னேறி, கைய கால புடிச்சு பெரிய கான்ட்ராக்ட வாங்கி, அத அப்ரசன்டிக (அப்ரண்டீஸ்) கெடுத்துருவாங்களேன்னு பயந்துட்டு இருக்குற ஒரு பெயின்டிங் கான்ட்ராக்டர் தான் நம்ம நேசமணி. காசு வாங்காமல் அப்ரண்டீஸாக வேலைசெய்பவர்களும் நம் ஊரில் இருக்கிறார்கள் என்ற விஷயத்தை முதன்முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, ஒரு சாதாராண பெயிண்டரா தன்னோட வாழ்க்கைய ஆரம்பிச்சு, இப்ப அதே பெயிண்டிங் தொழில்ல கான்ட்ராக்டர் ஆகுற அளவுக்கு முன்னேறியிருக்குற நேசமணி பத்தி நாலு பேர் நாலு விதமாதான் பேசுவாங்க. தன்கிட்ட வேலைக்கு சேர வந்த அப்ரசன்டிகளுக்கு காசு கொடுக்காம, அவங்க உழைப்ப உறிஞ்சி எடுக்குற ஒரு முதலாளித்துவ கான்ட்ராக்டர்தான் நம்ம நேசமணின்னு கூட சொல்லுவாங்க. ஆனாலும் நேசமணிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். 

 

1. நேசமணிக்கு பகல் கனவு காண்றது புடிக்காது. காலைல விடிஞ்சும் படுத்துகிட்டே நடிகைகள பத்தி கனவு கண்டுட்டு இருக்குற தன்னோட சொந்த அண்ணன் பையனயே பொடனில மிதித்து 'வேலைய பாருடா வெண்ணை'ன்னு அட்வைஸ் பண்ற தொழில் முனைவோர்தான் கான்ட்ராக்டர்ட நேசமணி. 

 

2. அதே அண்ணன் பையன, அடப்பாவி.. நீயாடா என்னை கொலை பண்ண பாத்தன்னு அப்பாவியா கேக்குறதும் அதே நேசமணி தான். அதுக்கப்பறம் அது வேற ரெண்டு கிட்னாப்பர்ஸ்னு தெரிஞ்சதும் அந்த அப்பாவித்தனம் மறைஞ்சு உள்ள இருக்குற கோபம் கண்ணுக்கேற முறைஞ்சுப் பாக்குறதும் அதே நேசமணிதான். அந்த ரெண்டு கிட்னாப்பர்ஸ தாக்குறதுக்காக அரிவாள தீட்டி தயாரா இருக்கறதும் அதே நேசமணி தான். நல்லவங்களுக்கு மட்டும்தான் சாமியா இருக்கனும்.. கெட்டவங்களுக்கு பூதமா இருக்கனும்னு நமக்கு சொல்லிக் கொடுக்குறதும் நம்ம நேசமணி தான். 

 

vadi

3. சம்பளமே இல்லாம வேலைக்கு  அப்ரன்டிஸ் வர்றாங்கன்னு  தெரிஞ்சதும், அப்பனா நம்மட்ட இருக்கற எல்லாவனயும் பத்திவிட்டு, எல்லாமே அப்பரன்டிஸா வச்சுக்குவோமுடான்னு சொல்வாரு நேசமணி. நிறைய பேரு இத காரணம் காட்டிதான், நேசமணி ஒரு கேப்பிடலிஸ்ட்னு சொல்றாங்க.  ஆனா இது ஒரு பிஸ்னஸ் டேக்டிக்ஸ். உலகத்துல நிறைய கம்பெனிகள் இத ஃபாலோ பண்றாங்க. குறைந்த செலவு இல்லனா செலவே இல்லாம, லாபம் பாக்குற இந்த பிஸ்னஸ் டாக்டிக்ஸயும் நாம நேசமணிட்ட இருந்து கத்துக்கலாம். 

 

4. கேப்பிடலிஸ்ட்னு சொன்ன அதே நேசமணின்னு, தன் கூட வேலை செய்யுற ஒருத்தனுக்கு தலைல அடிபட்டு எல்லாம் மறந்து போச்சு, அவனால சரியா வேலை செய்ய முடியாதுன்னு தெரிஞ்சும், அவன கூடவே வச்சுகிட்டு அவனுக்கு சாப்பாடு போட்டு நல்லா பாத்துக்கறதும் அதே நேசமணி தான். 

 

5. இவ்ளோ எளகுன மனசு உள்ள நேசமணிக்கு வேலைல தப்பு பண்ணா கோபம் வந்துரும். அதனால தான் பங்களா கேட்டுக்கு முன்னாடி சடன் பிரேக் போட்ட ட்ரைவரயும், கேட்ட தொறக்காம வச்சுருந்த வாட்ச்மேனயும் பயங்கரமா திட்டுறாரு நேசமணி. ப்ரென்ட்ஷிப், அன்புலாம் வெளியதான். வேலைல அத கொண்டு வரக்கூடாதுன்ற பாடத்த நாம நேசமணிட்ட இருந்து கத்துக்கலாம். 

 

vadi

 

6. அடுத்த சீன்ல வேலை செய்யுறவன் பூரா பொத்துன்னு பொத்துன்னு குதிக்கும்போது, அவங்கட்ட வருத்தத்தோட, கைய புடிச்சு கால புடிச்சு இந்த கான்ட்ராக்ட்ட வாங்கிருக்கேன்டா.. ஒரு லட்ச ரூபா கான்ட்ராக்ட்டுடா.. அதுல மண்ணள்ளி போட்றாதீங்கடான்னு சொல்லும்போது.. எவ்ளோ கஷ்டப்பட்டு.. எவ்ளோ வலி, வேதனை, அவமானம், புறக்கணிப்ப தாண்டி  நேசமணி இந்த கான்ட்ராக்டர புடிச்சுருப்பாரு.. இந்த நிலைமைக்கு வந்துருப்பாருன்றத நம்மளால புரிஞ்சுக்க முடியுது. பில்லா அஜித் மாதிரி, தன்னோட வாழ்க்கையோட ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு  நிமிஷத்தயும், ஏன் ஒவ்வொரு நொடியயும் செதுக்குனவரு நம்ம நேசமணி. 

 

7. அதே சீன்ல, மேனேஜர் வழுக்கி விழுந்து நேசமணிய பெயின்ட் டப்பால தள்ளிவிட்டதும்... முழுக்க முழுக்க கருப்பா வெளிய வர்ற நேசமணிய பாத்து சுத்தி இருக்குற எல்லாருமே சிரிக்குறப்ப, தானும் சந்தோஷமா சிரிச்சு, நாலு பேருக்கு நல்லது செய்றதுன்னா எதுவுமே தப்பில்லன்ற நாயகன் பாடத்த நமக்கு நகைச்சுவையா கத்துக் கொடுத்துருக்காரு நேசமணி. 

 

8. அப்ரசின்டிகளும் கோவாலும் கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து பங்களால இருக்குற கடிகாரத்த சல்லி சல்லியா நொறுக்குனப்பறமும், அது 200 வருச பழமையான  கடிகாரம்னு தெரிஞ்சதும், ஹப்பாடா.. நான் கூட புதுசுன்னு நெனச்சு பயந்துட்டேன்னு சொல்லுவாரு நேசமணி. மனுசனுக்கு இல்லாத மதிப்பு, 200 வருச கடிகாரத்துக்கு எதுக்குன்ற சமத்துவ தத்துவத்தயும் நமக்கும் சொல்லிக் கொடுக்குறாரு நேசமணி. 

 

vadi

 

9. இதுக்கு அடுத்த வர்ற காட்சிதான்.. யாராலயும் மறக்க முடியாத, இப்ப உலகம் முழுக்க ட்ரெண்டிங் ஆய்ட்டு இருக்குற சுத்தியல் காட்சி. எல்லாரோட வேலையும் மாத்தி மாத்தி பிரிச்சு கொடுப்பாரு நேசமணி. யாரால இந்த பிரச்சினைகள்லாம் வருதோ அவங்களுக்கு பிரச்சினை வராத வேலையா கொடுப்பாரு.  ஃபர்னிச்சர் தூக்கப் போற கிருஷ்ணமூர்த்திட்ட, ஃபர்னிச்சர் மேல கை வச்ச மொத டெட்பாடி நீதான்டானு வார்ன் பண்ணுரு. இது மூலமா, தகுதியான ஆளுங்கட்ட தான் பொறுப்ப கொடுக்கனும்ன்ற அரசியல் மேலான்மைய கத்துக்கொடுக்குறாரு நேசமணி. தப்பான ஆளுங்கட்ட வேலையயும், ஏன் ஆட்சியயும் கொடுத்தா, அந்த கடிகாரத்துக்கு நேர்ந்த கதிதான் நம்ம நாட்டுக்கும்.  

 

10.  ஆணி புடுங்குறது ரொம்ப ஈசியான வேலைன்னு நம்மளாம் நினைச்சுட்டு இருந்துருப்போம்.  ஆனா அதுவும் எவ்ளோ கஷ்டமான வேலை, அதுல கொஞ்சம் தப்பு நடந்தா என்ன நடக்கும்ன்றதயும் தான்  அடிபட்டு நமக்கு புரிய வச்சுருக்காரு நேசமணி. ஆணில கூட தேவையில்லாத ஆணி எது, தேவையான ஆணி எதுன்னு தெரிஞ்சுட்டு புடுங்கன்னுன்ற ப்ளானிங்கயும் கத்துக்கொடுத்துருப்பாரு நேசமணி. அதுக்கப்பறமும் தப்பு நடந்ததால, அப்ரசன்டிகள வேலை செய்யாம பாத்துக்கறதுக்காகவே ஒருத்தன  அப்பாயின்ட் பண்ணுவாரு நேசமணி. சரியான வேலைய பத்து பேர் செஞ்சாலும், ஒருத்தன் தப்பான வேல செஞ்சா, மொத்த வேலையுமே கெட்டுப்போகும்ன்ற கார்ப்பரெட் ஸ்ட்ராடஜிய அப்பவே கத்துக்கொடுத்துருக்காரு நம்ம நேசமணி. 

 

ஆக.. இதெல்லாம் நேசமணியோட 30 நிமிச வாழ்க்கைல இருந்து நாமலாம் கத்துக்க வேண்டிய பாடங்கள், என்ன நடந்தாலும், தமிழ்நாட்ட சாதி, மத ரீதியா பிரிக்க முடியாதுன்ற மறுபடியும் நிரூபிக்கற மாதிரி, அத்தனை பேரும் நேசமணிக்காக ஒன்னு சேர்ந்துருக்கோம். அவர் திரும்பி வர்றதுக்காக ப்ரே பண்ணிட்டு இருக்கோம். நம்மளோட இந்த வேண்டுதல்.. இந்த கூக்குரல்.. நிச்சயம் கான்ட்ராக்டர் நேசமணி காதுல விழும். நிச்சயம் நமக்காக அவரு பழைய நேசமணியா, பழைய வைகைப்புயல் வடிவேலுவா.. திரும்பி வருவாருன்னு நம்பலாம். 

 

சீக்கிரம் வாங்க தலைவா!  
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

''டக்குனு நீங்களும் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க'' - நடிகர் வடிவேலு பேட்டி 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
vadivelu

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்ற வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் திதிக்கு இங்கு மோட்ச விளக்கு போடுவதற்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய தெய்வம் அவர்கள். அவர் இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை. அம்மா இறந்த ஆறு மாசத்தில் தம்பி இறந்துட்டாரு. அந்த இரண்டு துக்கமும் இன்னும் குடும்பத்தை போட்டு வாட்டுது. இன்னும் அதில் இருந்து நாங்கள் மீளவில்லை. இப்பதான் அம்மாவிற்கு முடிந்திருக்கிறது. இன்னும் ஆறு மாதம் கழித்து தம்பிக்காக இங்க வந்து மோட்ச தீபம் ஏத்தணும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''எல்லாருமே வரலாமே (செய்தியாளர்களை நோக்கி) நீங்களும் கூட வரலாம். வீடியோ கேமரா எடுத்துக் கொண்டிருக்காமல் நீங்களும் வரலாம். வேலை இருக்கிறதா? வர வேண்டியதுதானே. இப்படியே கேமராவை பிடித்துக் கொண்டு எத்தனை நாள் வேலை பார்ப்பீர்கள். டக்குனு நீங்கள் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க. வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்வதற்கு யாராக இருந்தாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வந்தார்கள். டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு எல்லாரும் நல்லது செய்யத்தான் வந்தாங்க. அது மாதிரி நல்லது செய்ய வருகிறார்கள். வருபவர்களை வரவேற்கிறோம். வரட்டும் வந்து மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லையே வரட்டும்'' என்றார்.