விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. பொதுவாக சமீப காலங்களில் விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் எதாவது ஒரு வகையில் பிரச்சனை உருவாகி வருகிறது. இதனால் கடைசி நிமிடம் வரை படக்குழுவிற்கு நெருக்கடி ஏற்பட்டு பட வெளியீட்டை சுமூகமாக வெளியிடும் சூழல் அமையவில்லை. ஆனால் இப்படி வரும் தடைகளை கடைசி நேரத்தில் எப்படியாவது படக்குழு சமாளித்து அறிவித்த தேதியில் வெளியிட்டு வருகிறது. ஆனால் அதே போல் ஜன நாயகன் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Advertisment

பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் தற்போது வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று மற்றும் இன்று நடந்துள்ளது. தணிக்கை வாரியமும் படக்குழு தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். நீதிபதியும் தணிக்கை வாரியத்துக்கு சராமரி கேள்வி எழுப்பினார். இவ்வழக்கின் தீர்ப்பு பட வெளியீட்டு தேதியான ஜன.9ஆம் தேதி காலை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காலை காட்சிக்கான டிக்கெட்  முன்பதிவு தொடங்கி முடிந்துள்ளது. 

Advertisment

இந்த நிலையில் திரைத்துறையில் இருந்து தற்போது விஜய்க்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளது. விஜய்யின் தீவிர ரசிகரும் இயக்குநருமான ரத்னகுமார், பிரபல கிரேக்க தத்துவஞானியான பிளாட்டோ எழுதிய பொன்மொழியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது, “அநீதியின் மிக மோசமான வடிவம், போலி நீதிதான்” என்பதாகும். இவரை தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து, “இது அதிகாரத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகம். எந்தவொரு திரைப்படமும் ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல. ஒரு படம் திரைக்கு வர நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பும் பணமும் சம்பந்தப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு எனது முழு ஆதரவு. இது விஜயின் படம், அவருடைய கடைசிப் படம். அது எப்போது வெளியானாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதை நாங்கள் கொண்டாடுவோம். தலைவன் படம் எப்போ ரிலீஸோ அப்போ தியேட்டர் பக்கம் போறேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.