தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளில் அனுபவமிக்கவராக இருக்கும் சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார். தமிழ் திரைப்பட வரலாற்றை டிஜிட்டல் ஆவணமாகப் பாதுகாப்பது, அதே நேரத்தில் வதந்தி மற்றும் சர்ச்சைகளைத் தவிர்த்து, சினிமாவைப் பற்றிய ஆழமான, அர்த்தமுள்ள மற்றும் ஆய்வுத் தன்மையுடைய உரையாடல்களை வழங்குவது இந்த சேனலின் பிரதான நோக்கமாகும்.
மற்ற எங்கும் பதிவு செய்யப்படாத பல அரிய நினைவுகள், அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் இந்த சேனலின் மூலம் ஆவணப்படுத்தப்படுகின்றன. இந்த சேனல் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் ‘ஃப்ரேம் & ஃபேம் (FRAME & FAME)’ விருது வழங்கும் விழா 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விருது விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
நிகழ்வில் சித்ரா லட்சுமணன் பேசுகையில், “ஒரு பத்திரிக்கை தொடர்பாளராக இருந்து தான், நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். டூரிங் டாக்கீஸ் சேனலில் சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமில்லாமல், தோல்வியடைந்தவர்கள் பற்றியும் நாம் பேசியுள்ளோம். சினிமாவை பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும் என்று தான் அந்த ஒரு முடிவை எடுத்தோம். நாம் திரையுலகில் இருக்கிறோம், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் ஃப்ரேம் & ஃபேம் – திரைப்பட விருது விழா. எந்த ஒரு கலைஞர்களுக்கும் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், மேடையில் வாங்கும் கைதட்டல்கள் அதற்கு ஈடாகாது. இந்த விருது வழங்கும் விழாவிற்கு கே. பாக்யராஜ் தேர்வுக் குழுவின் தலைவராக செயல்பட, குஷ்பூ சுந்தர், இளவரசு, முரளி ராமசாமி, டி. சிவா, ஆர். கே. செல்வமணி, ஆர். பி. உதயகுமார் ஆகியோர் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கின்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பத்திரிக்கை தொடர்பாளர் தொடங்கி, இயக்குனர் கதாநாயகன், கதாநாயகி என 50 கேட்டகிரியில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. வழக்கமாக கொடுக்கப்படும் விருதுகள் மட்டும் இல்லாமல் ஸ்பெஷல் ஆக சில விருதுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். விருது வழங்கும் விழா என்பது மிகப்பெரிய வேலை. நீண்ட நாட்களாக இது தொடர்பாக யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 25ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது” என்றார்.
Follow Us