அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியான படம்  ‘மனசங்கர வரபிரசாத் காரு’. ஷைன் ஸ்கிரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் வெங்கடேஷ் கேமியோ ரோலிலும் கேத்ரின் தெரசா முக்கியமான ரோலிலும் நடித்திருந்தனர். பீம்ஸ் செசிரோலியோ என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிரஞ்சீவி பேசுகையில்,  தெலுங்கு திரையுலகில் ‘காஸ்டிங் கவுச்(casting couch)’ எனப்படும் பாலியல் சுரண்டல் கலாச்சாரம் இல்லை என பேசினார். அவர் பேசியதாவது, “காஸ்டிங் கவுச் இங்கு இல்லை. அது நீங்கள் நடந்து கொள்வதை பொருத்துதான். உங்களுக்கு இது போன்ற விஷயங்கள் இருக்கிறதா என்ற எண்ணம் இருக்கக் கூடாது. நீங்கள் தொழில்முறையாக நடந்து கொண்டால் மற்றவர்களும் அதுபோலவே நடந்து கொள்வார்கள். 

Advertisment

தெலுங்கு திரையுலகம் ஒரு கண்ணாடி போன்றது. நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அதனால் இந்த துறைக்குள் நுழைய விரும்பும் நபர்கள், உறுதியுடனும் கடின உழைப்புடனும் வாருங்கள். இந்தத் துறை ஒரு சிறந்த துறை. பெண்கள், ஆண்கள் என எல்லோரும் இங்கு சிறந்து விளங்குவார்கள். ஒருவேளை அப்படி யாராவது சிறந்த விளங்கவில்லை என்றாலோ அல்லது இங்கு எதிர்மறையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்றாலோ அல்லது தங்களுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது என்று கூறினாலோ அது அவர்களுடைய சொந்தத் தவறுதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் கண்டிப்பாகவும் அதில் தீவிரமாகவும் இருந்தால் யாரும் உங்களை பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்” என்றார். இது தற்போது சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பலரும் இவரது கருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.