இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று ரீ ரிலிஸாகிறது. 2004ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் சேரன், சினேகா படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் சேரன் பேசுகையில், “இந்த மேடை சேரனை பற்றிய பாராட்டுரையாகவும், சேரனை பற்றிய விமர்சன மேடையாகவும் மாறிவிட்டது. இது இப்படித்தான் இருக்கும். இத்தனை ஆண்டு கால பயணத்தில் எல்லாவித மனிதர்களையும் சந்தித்து இருக்கிறேன். எல்லா நல்லவர்களையும் சந்தித்து இருக்கிறேன். பல தீய காரணங்களையும் எதிர்கொண்டு இருக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறோம். அதைத்தான் இந்த படம் சொல்கிறது. வாழ்க்கையில் நிறைய புதிய விஷயங்களை பார்ப்பீர்கள். அதனால் நீ எப்படி இருக்கிறாயோ அதனை அப்படியே கடந்து செல். இதுதான் எனக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்தது.
இந்த மேடையில் பேசிய எல்லோருடனும் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் எனக்கான மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். அதனால் இதில் விளக்கம் சொல்வதற்கு எதுவும் இல்லை. என்னுடைய உதவியாளர்களுக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். நீங்கள் நிறைய மேடைகளை விழாக்களை பார்த்திருப்பீர்கள். ஒரு இயக்குநரை அவருடைய உதவியாளர்கள் விமர்சித்த மேடை உண்டா? ஆனால் அதை நான் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்தும் கொடுப்பேன். அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவேன். ஏனெனில் ஒரு தகப்பனுக்கு தெரியும் தன்னுடைய பிள்ளைகளின் குணம் என்ன என்று. என் அப்பா என்னை எப்படி வளர்த்தாரோ.. அதே போல் என்னுடைய உதவியாளர்களையும் வளர்த்திருக்கிறேன்.
21 வருடங்களுக்குப் பிறகு ஆட்டோகிராப் படம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இந்த படம் அவர்களுக்கு என்ன சொல்லும்? நான் இப்படித்தான் படம் எடுப்பேன். வணிக நோக்கத்திற்காக நான் படம் எடுத்திருந்தால் என்றைக்கோ காணாமல் போய் இருக்கலாம். பெரிய வெற்றியை கொடுத்து இருப்பேன். அஞ்சு படம் பெரிய ஹீரோக்களுடன் பணியாற்றி இருப்பேன். அதன் பிறகு காணாமல் போய் இருப்பேன். ஆனால் இன்றும் என்னுடைய படம் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த சமூகத்தில் யாரையோ ஒருவரை கையைப் பிடித்து அழைத்து கொண்டு கரை சேர்க்கிறது என்றால் அதைத்தான் என்னுடைய வெற்றியாக பார்க்கிறேன். அப்படித்தான் நான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி இருக்கிறேன்.
இந்த ஆட்டோகிராப் படத்தைக் கூட அப்படித்தான் உருவாக்கினேன். எந்த தோல்வியாக இருந்தாலும் அதை கடந்து செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. இதில் காதல் ஒரு கருவி மட்டும் தான். நீ எங்கேயும் சோர்ந்து போய் விடாதே.. அப்படி என்று சொல்வதுதான் இந்தத் திரைப்படம். 'ஒவ்வொரு பூக்களுமே..' என்ற பாடலை நானே பலமுறை உணர்ந்து பாடி இருக்கிறேன். சினேகனும் பலமுறை பாடியிருக்கிறார். அமீர் நிறைய முறை பாடியிருப்பார். சினேகாவும் இந்த பாடலை நிறைய முறை பாடியிருப்பார். ஏனெனில் தோல்வி வரும் அனைவருக்கும் அதை எதிர்கொண்டு கடந்து சென்று வெற்றி பெறும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அதை இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும்.
இதைக் கடந்து இந்த படத்தை நான் தற்போது வெளியிடுவதால் எதையும் சாதித்து விடப் போவதில்லை. இன்றைய தலைமுறை எப்படி இருக்கிறது என்று எமக்குத் தெரியும். இந்தத் தலைமுறையினர் இந்தப் படத்தை பார்த்தால் அவர்களுக்கு வேறு ஒரு யோசனை தோன்றலாம். நாம் விதைக்கத்தான் முடியும். அதற்கு இந்த படம் தகுதியானது என்பதால் மீண்டும் வெளியிடுகிறோம். மனிதனை மனிதனாக பார். அவனை திருத்த வேண்டும் என்று நீ நினைக்காதே. அவனை அப்படியே ரசி. நீ அழகாய் இருப்பாய். அப்படித்தான் நான் இந்த உலகத்தை அழகானதாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அமீர் குறிப்பிட்ட ஒரு விஷயம் சரியானது. நான் பெண்களுடனேயே பிறந்து வளர்ந்தவன். அவர்கள் என்னை பக்குவப்படுத்தி இருக்கிறார்கள், நான் பெண்களிடம் அன்பை மட்டும் தான் காட்ட முடியும். அது மற்றவர்களின் கண்களுக்கு அன்பாக தெரியவில்லை என்றால் அது என்னுடைய பிரச்சனை இல்லை. எனக்கும், சினேகாவுக்கும் இடையேயான நட்பு இன்றும் தொடர்கிறது என்றால் எங்கள் இடையே இருக்கும் கண்ணியம் தான் காரணம். சினேகாவிற்கும், பிரசன்னாவிற்கும் திருமணம் நிச்சயமானதற்கும் நான்தான் மிக முக்கியமான காரணம். பிரசன்னா எனக்கு முக்கியமான நண்பர். என்னை மதிக்கக் கூடியவர். பிரச்சனைகளை காரணம் காட்டி நீங்கள் உங்களது திருமணத்தை தள்ளிப் போடாதீர்கள். அதுவே பிரச்சனையாகிவிடும். முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வருவதை எதிர்கொள்ளலாம் என்று சொன்னேன். நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லதை மட்டும் நினைக்கிறேன். அது நல்லதாக தெரியவில்லை என்றால் அது என்னுடைய பிரச்சனை இல்லை. அது அவர்களுடைய பிரச்சனை.
ஆட்டோகிராப் திரைப்படம் முதலில் வெளியான போது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லை. படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளியான பிறகு தான் கூட்டம் அதிகரித்தது. இந்த படத்தை கொண்டாடினார்கள். நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும் என இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகத்தை அது அளித்தது. விமர்சனங்கள் ஒரு காலத்தில் நேர்மையானதாகவும் விசாலமான பார்வையுடனும் இருந்தது. ஆனால் இன்று அதில் எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது. இன்று ஆன்லைனை எடுத்துக் கொண்டால் எல்லாம் மார்க்கெட்டிங் என்றான பிறகு நாம் மனிதத்தை இழந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தப் படத்தை நான் மீண்டும் எடிட் செய்து 15 நிமிடங்களை குறைத்து இருக்கிறேன். இந்தப் படத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் கலர் கரெக்ஷன் முழுவதுமாக செய்து இருக்கிறேன். இசை பழமை வாய்ந்ததாகவே இருக்குமே, அது கூட ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக டால்பி அட்மாஸ் போன்ற புதிய இசை நுட்பங்களை இணைத்து இருக்கிறோம். பார்வையாளர்களை எங்கும் ஏமாற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். 50 லட்சம் ரூபாயை செலவழித்து இந்த படம் புதிய அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி இருக்கிறேன்” என்றார்.
Follow Us