கருரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்திய நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவும் விசாரித்து வருகிறது.
ஏற்கனவே தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த் மற்றும் சிடி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன் ஜாமீன் கேட்டு இருவரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரும் தற்போது தலைமைறைவாக இருக்கின்றனர். இதனிடையே தவெக-வின் மற்றொரு நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மீது சமூக வலைதளத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு பின்பு நீக்கியது தொடர்பாக அவரும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தாருடன் விஜய் வீடியோ காலில் பேசியதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அக்குடும்பத்தாரை கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு வரவழைத்து அங்கு அவர்களுக்கு ஆறுதல் சொல்ல விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக விஜய்க்கு பாதுகாப்பு கோரி தவெக-வினர் இமெயில் மூலமாக காவல்துறை தலைமையிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் விஜய்யை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார்... ரொம்ப தவறா இருக்கு விஜய். நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான மரியாதை. அப்போதான உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார்... ரொம்ப தவறா இருக்கு @actorvijay . நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான மரியாதை.. அப்போதான உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது.. https://t.co/nCDDnWEEu7
— Cheran Pandiyan (@CheranDirector) October 10, 2025