தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்விஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் கடந்த 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இவ்விருதினை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். 

Advertisment

இதில் திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணாபாலமுரளி, லிஜோ மோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  

Advertisment

இந்த விருது பலராலும் பாராட்டப்பட்டாலும் அதே சமயம் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இயக்குநர்கள் பா.ரஞ்சித், கோபி நயினார், கௌதம்ராஜ் உள்ளிட்டோர் தமிழக அரசினை விமர்சித்திருந்தனர். அந்த வகையில் சேரன் தனது ஆதங்கத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பெண்களுக்கு இலவச பஸ்... வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை... திருமணத்திற்கு அரசு உதவி.. இதையெல்லாம் செய்யும் அரசு... பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்... 

வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த ‘திருமணம்’ திரைப்படம் தேர்வு குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது. அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது, இனி எவருக்கும் இதுபோல் நடக்க கூடாது. நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றைடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசுகள் மாறலாம், அரசின் நிலைப்பாடு என்றும் பாராபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment