எல் ஆர் சுந்தர பாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா, பவித்ரா, பேபி ஸ்ரீவர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஃபோர்த் ஃப்ளோர். மனோ கிரியேஷன் தயாரித்துள்ள படத்திற்கு தருண்குமார் இசையமைத்துள்ளார். சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, “நிறைய தயாரிப்பாளர்கள் ஆசைப்பட்டு படம் எடுத்து அதை மக்களிடம் சேர்ப்பதில் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் வலி எனக்குத் தெரியும். அவர்கள் தன்னுடைய குடும்ப பணத்தை சினிமாவில் செலவிட்டு அதை மீட்டெடுக்க வழி இல்லாமல் இருக்கிறார்கள். அப்போது இயக்குநர்கள் மனசாட்சி இல்லாமல் ஒரு தயாரிப்பாளரை குழிக்குள் தள்ளி விடுகிறோமா என்றால் ஆமாம். இதற்குக் காரணம் ஒழுங்கு படுத்தாத சினிமாவிற்குள் கூட்டத்தோடு ஓடுவது தான். இதை சரிசெய்வது மிகவும் சுலபம். கட்டுப்பாடும் ஒழுங்கும் எல்லோரும் பிழைக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையும் இருந்தால் போதும். அதை தயாரிப்பாளர் சங்கம் முயற்சி செய்ய வேண்டும்.
அப்போதெல்லாம், திரையரங்குகளில் கட்டாயம் திரையிடப்படலாம் என்ற திட்டம் இருந்தது. அதன் மூலம் ஒரு வாரத்திற்கு என் படத்தை நான் திரையிட்டுக் கொள்ளலாம். ஒரு வாரத்திற்கு பிறகு படம் ஓடவில்லை என்றால் தூக்கிவிடலாம். ஆனால் இப்போது பங்கீட்டில் லாபத்தை பிரித்துக் கொள்வது சிறிய தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை கொடுக்கிறது. பொதுவாக பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் தான் ஓடுகிறது. அதனால் ஓடிடியை சிறிய தயாரிப்பாளர்கள் நம்பினார்கள். ஆனால் அவர்கள் தியேட்டரில் ஓடினால் தான் படம் வாங்குவோம் என்பதால் அவர்கள் எங்கே போவார்கள். அதனால் இதனை முறைப்படுத்துவதற்கு ஒரு அதிகாரம் வேண்டும். அது அரசாங்கத்திடம் இருக்கிறது. சிறிய படங்கள் படம் மூலமும் அரசாங்கத்திற்கு வரி செல்வதால் அதை கருத்தில் கொண்டு அரசாங்கம் சிறிய தயாரிப்பாளர்கள் பிழைக்க வழி வகுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை.
வரி வாங்குவதற்கு நீங்கள் கட்டாயப்படுத்தினால் நான் பிழைக்கவும் நீங்கள் ஒரு வழி உருவாக்க வேண்டும். அதனால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்கள் எல்லாரையும் அழைத்து பேசுங்கள். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது டப்பிங் படங்கள் இங்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழ் படங்களை 90 நாட்கள் கட்டாயமாக திரையிடப்பட இல்லையென்றால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என அவர் அறிவித்தார். அதைத்தான் இப்போது சிறிய படங்களுக்கு ஒரு மூன்று மாதம் ஒதுக்கி கொடுங்கள். அந்த நேரத்தில் பெரிய படங்கள் வரக்கூடாது என சொல்லுங்கள். இப்படி நடந்தால் மூன்று மாதத்திற்கு 72 படங்கள் ரிலீஸாகும். அதன் மூலம் 72 தயாரிப்பாளர்கள் பிழைப்பார்கள்.
இதை யார் போய் கேட்பது நான் தனியாக கேட்டால் அது அரசாங்கத்திற்கு எதிரானவன் என ஆகிவிடும். இதுவே ஒரு கூட்டத்தோடு கேட்டால் அரசாங்கத்துக்கான பிரச்சனையாக மாறும். இதன் பிறகு அரசாங்கம் கூப்பிட்டு இந்த பிரச்சனையை பேசினால் நான் இந்த மேடையில் கலந்து கொண்டதற்கு ஒரு பிரயோஜனம் உண்டு” என்றார்.
Follow Us