நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் படத்திற்கு சான்று வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. பின்பு மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து வழக்கின் விசாரணையை மீண்டும் முதலிலிருந்து விசாரித்து புதிய உத்தரவை பிறப்பிக்க தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கை ஏற்கனவே முதலில் விசாரித்த தனி நீதிபதி பி.டிஆஷா விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் தனிநீதிபதி பி.டிஆஷா முன்பு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே படத் தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மறு ஆய்வுக்கு செல்லவும் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/05-17-2026-01-30-18-02-33.jpg)