தீபாவளி பண்டிகைக்கு வழக்கமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் சூழல் தொடர்ந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக வளர்ந்து வரும் அல்லது பரீட்சையமான ஹீரோக்களின் படங்கள் வெளியாகி வருகிறது. இந்தாண்டு முழுக்க முழுக்க இளம் ஹீரோக்களின் படம் ஆக்கிரமித்துள்ளது. இதனால் திரைப்பிரபலங்கள் சிம்பு, ரவி மோகன், கார்த்தி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்பட பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தீபாவளி ரேஸில் மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’, பிரதீப் ரங்கநாதன் - கீர்த்திஸ்வரன் கூட்டணியின் ‘டியூட்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் - சண்முகம் முத்துசாமி கூட்டணியின் ‘டீசல்’ ஆகிய படங்கள் இருக்கிறது. இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள இப்படங்களை படக்குழுவினர் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளிக்கின்றனர்.
அந்த வகையில் பைசன் படம் பார்ப்பதற்காக விக்ரம் மற்றும் படக்குழுவினர் துருவ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள திரையரங்கில் பார்க்கின்றனர். அதற்கு முன் திரையரங்கத்திற்கு வந்த அவர்களுக்கு ரசிகர்கள் பூவி தூவி வரவேற்பு அளித்தனர். அதே போல் டுயூட் படம் பார்ப்பதற்காக பிரதீப் ரங்கந்தான், கீர்த்திஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.