பாலிவுடில் யாமி கெளதம், இம்ரான் அஸ்மி உள்ளிட்ட பலர் நடிப்பில் சுபர்ன் எஸ் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹக்’. ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் மிஷ்ரா இசையமைத்துள்ளார். இப்படம் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு முக்கியமான தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. 

Advertisment

1985 ஆம் ஆண்டு ஷாபானு என்ற முஸ்லீம் பெண்ணிற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஷாபானு என்பவர் 1978 ஆம் ஆண்டு அவரது கணவரான வழக்கறிஞர் முகமது அகமது கானை விவாகரத்து செய்து ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பல போராட்டங்களுக்குப் பிறகு முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இது முஸ்லீம்களின் ஷரீயத் சட்டத்துக்கு எதிரானது என அப்போது பெரும் சர்ச்சை கிளம்பியது. 

Advertisment

இருப்பினும் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகுஅப்போதைய ராஜீவ் காந்தி அரசாங்கம் முஸ்லீம் பெண்கள் விவாகரத்துக்கு பின்பு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என 1986ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றியது. இதையடுத்து ஷாபானு 1992 ஆம் ஆண்டு இறந்தார். இவரது மகளான சித்திகா பேகம், இப்படத்திற்கு எதிராக மத்திய பிரதேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இப்படம் தங்கள் குடும்பத்தின் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மறைந்த தன் தாயாரின் வாழ்க்கையை தவறாக சித்தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தை வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். முன்னதாக இப்படத்தை நிறுத்த வேண்டும் என படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் தரப்பில், இது ஒரு கற்பனையான சித்தரிப்பு என்றும் இந்த படம் இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். ஷா பானுவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பு மட்டுமில்லாமல் ‘பானு, பாரத் கி பேட்டி’ என்ற புத்தகத்தை தழுவி கற்பனையாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisment