துல்கர் சல்மான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை நடிகர் ராணா டகுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்ட இன்னும் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜானு சாந்தர் இசையமைத்துள்ள இப்படம் 1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டு வரும் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்திற்கு எதிராக தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரனும் தமிழக அரசின் இணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான தியாகராஜன் வழக்கு தொடுத்துள்ளார். அவர் தொடுத்த மனுவில், படத் தயாரிப்பு நிறுவனங்களை மேற்கோள்காட்டி ‘காந்தா படம் தனது தாத்தா தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதாக இருந்தால் அவர்களின் சட்டப்பூர்வமான வாரிசுகளிடம் அனுமதி பெற வேண்டும். படத்தில் கதாபாத்திரத்தின் பெயர்களை மாற்றி இருந்தாலும் கூட அதை மக்கள் நினைவு கூற முடியும். 

Advertisment

இப்படத்தில் பாகவதர் ஒழுக்கமின்றி வாழ்ந்ததாகவும் கண்பார்வை இன்றி கடைசி காலத்தில் கடனாளியாக இறந்ததாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகவதர் பங்களாவும் உயர்ந்த கார்களும் வைத்திருந்தார். அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறை கொண்டு சித்தரிக்கப்பட்ட இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு சென்னை நகர ஏழாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது துல்கர் சல்மான் மற்றும் பட தயாரிப்பு நிறுவனங்கள் வரும் 18ஆம் தேதிக்குள் மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.