குரியர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்க்கும் ஜிவி பிரகாஷ் வண்டியிலிருந்து பல லட்சம் மதிப்புள்ள போதை பொருள் கொண்ட பார்சல் மர்ம நபரால் திருடப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஜிவி பிரகாஷின் முதலாளி வேட்டை முத்துக்குமார் ஜிவி பிரகாஷின் காதலியான தேஜு அஸ்வினியை கடத்தி வைத்துக் கொண்டு அந்த பார்சல் வராவிட்டால் தேஜுவை விட மாட்டேன் என மிரட்டுகிறார். இதனால் செய்வது அறியாது திணறும் ஜிவி பிரகாஷ் போதைப் பொருளுக்கான பணத்தைப் பிரட்ட தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பிந்து மாதவி தம்பதியின் குழந்தையை கடத்தி அதன் மூலம் அந்த பணத்தை சம்பாதித்து அதை வைத்து தன் காதலியை காப்பாற்ற நினைக்கிறார். இதற்கிடையே அந்த குழந்தையை வேறு ஒருவர் கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறார். இதைத்தொடர்ந்து அந்த குழந்தை பல இடங்களில் கை மாறுகிறது. இதையடுத்து கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டதா, இல்லையா? குழந்தையை கடத்தியது யார்? ஜிவி பிரகாஷின் பிரச்சனை சரி செய்யப்பட்டதா, இல்லையா? தேஜு அஷ்வினியின் நிலை என்னவானது? காணாமல் போன போதை பார்சல் கிடைத்ததா, இல்லையா? என்பதை இப்படத்தின் மீதி கதை.

Advertisment

கடத்தலை மையமாக வைத்துக் கொண்டு அதன் மூலம் பிளாக் மெயில் செய்யும் ஆசாமிகளை பற்றிய படமாக இப்படத்தை திரில்லர் பாணியில் கொடுத்து ஓரளவு ரசிக்கும்படியான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மு மாறன். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மூலம் விறுவிறுப்பாக கதை சொல்ல முயற்சித்து இருக்கும் இயக்குனர் அதை நேர்த்தியான முறையில் ஓரளவு திருப்பங்களோடு கூறி படத்தையும் கரை சேர்த்திருக்கிறார். இரண்டாம் பாதியில் முடிச்சுகளை அவிழ்த்து அதன்மூலம் சுவாரசியத்தை கூட்டி இருக்கும் இயக்குனர் அதேபோல் முதல் பாதியையும் இன்னுமும் கூட விறுவிறுப்பாக கொடுத்து இருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். படத்தின் பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுவது திரைக்கதையில் இருக்கும் டுவிஸ்டுகள். குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு அதை கடத்தியவர் யார் என்ற குழப்பத்தை படம் முழுவதும் சஸ்பென்சோடு வைத்துக்கொண்டு அதை சரியான இடங்களில் ரிவில் செய்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். அதுவே படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. இருந்தும் அந்த குழந்தை கடத்தல் சம்பவத்தில் இருக்கும் பரிதவிப்பையும் குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகளும் நீளமாக இருப்பது சற்றே அயற்சியையும் கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தை சிறப்பான முறையில் கிறிஸ்ப்பாக சொல்லி இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

2

ஜிவி பிரகாஷ் வழக்கம்போல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். எந்தெந்த இடங்களில் எவ்வளவு எமோஷனல் தேவையோ அதை அளவாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். நாயகி தேஜு அஸ்வினி ஆரம்பத்தில் சிறிது நேரம் வந்தாலும் பிற்பகுதியில் காணாமல் போய் பின்பு கடைசியில் வந்து சேருகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பான முறையில் செய்து கவனம் பெற்று இருக்கிறார். தொழிலதிபர் ஸ்ரீகாந்த் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கவனம் பெறும்படியான வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக வரும் பிந்து மாதவி நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் பிரவேசம் செய்து இருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் லிங்கா முத்துக்குமார் ரமேஷ் திலக் உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். இவர்களது கதாபாத்திரம் படத்திற்கும் வலு சேர்த்து இருக்கிறது.

Advertisment

கோகுல் பினாய் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. வழக்கத்திற்கு மாறாக சாம் சி எஸ் இசையில் பின்னணி இசை ஓரளவு சிறப்பு. எப்பொழுதும் காதை பிளக்கும் சத்தத்தை அதிகமாக கொடுக்கும் சாம் சி எஸ் இந்த படத்தில் அடக்கி வாசித்திருக்கிறார்.

ஒரு குழந்தை கடத்தல் கதையை வைத்துக்கொண்டு அதனுள் பல்வேறு விதமான திருப்புமுனைகளை கொடுத்து ரசிக்க வைத்திருக்கும் இயக்குனர் அதை கடைசி வரை மெயின்டன் செய்து பார்ப்பவர்களுக்கு ஓரளவு நல்ல திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார். ஆங்காங்கே சில பல லாஜிக் ஓட்டைகள் வேகத்தடைகள் இருந்தாலும் கதை சொன்ன விதமும் அதற்கான திரைகதை வியூகமும் நேர்த்தியாக அமைந்து மற்றதை மறக்கடிக்க செய்து விடுகிறது. 


பிளாக் மெயில் - நேர்த்தி!