பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் கபடி விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் ஈரானிய அணியை 75 - 21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதனால் கார்த்திகாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பா.ரஞ்சித், கோபி நயினார், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 

Advertisment

இந்த நிலையில் கார்த்திகாவிற்கு பைசன் படக்குழு சார்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் வாழ்த்து தெரிவித்து பரிசும் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக விளையாடிய கார்த்திகா இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்து இறுதிப் போட்டியில் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்த தங்கமகள் கார்த்திகாவையும், இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்த அவரது கண்ணகி நகர் கபடிக்குழுவின் முயற்சியை பாராட்டி கவுரவிப்பதற்காக கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று இன்று எனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டேன். 

Advertisment

அதோடு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கார்த்திகாவிற்கும் ரூ.5 லட்சமும், அவர்களது கண்ணகி நகர் கபடி குழுவிற்கு ரூ.5 லட்சமும் காசோலைகள் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் சார்பாகவும், அப்ளாஸ் என்டேர்டைன்மெண்ட் சார்பாகவும மற்றும் பைசன் படக்குழு சார்பாகவும் வழங்கி மகிழ்ந்தேன். இன்னும் இது போல் வேலியே போட முடியாத பல வெற்றிகளை கண்ணகி நகர் கார்த்திகாக்கள் பெறட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பைசன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமும் அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை கதையை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான சமயத்தில் கார்த்திகாவும் வெற்றி பெற்றதால் பட ஹீரோவுடன் கார்த்திகாவை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் சிலர் பாராட்டு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisment