மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த மாதம் 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தொடங்கி, இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், வசந்தபாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராடியிருந்தார். தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இப்படத்தை பாராட்டி ‘இயக்குநர் திலகம்’ என்ற பட்டத்தையும் மாரி செல்வராஜுக்கு வழங்கியிருந்தார். அடுத்து துரை வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் 70கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 21ஆம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை ஓடிடியிலும் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
Follow Us