கன்னட பிக் பாஸின் 12வது சீசன் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி, பெங்களூருக்கு அருகே பிடாடி தொழில்துறை பகுதியில் உள்ள ஜாலி வுட் ஸ்டுடியோஸ் மற்றும் அட்வென்ச்சர்ஸ் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. இதில் கழிவு நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது என்பது குறித்து கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கழிவுநீர் அங்கு சுற்றுப்புற பகுதிகளிலே வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. 

Advertisment

அதைத்தாண்டி திடக்கழிவுகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் உள்ளே இரண்டு டீசல் ஜெனரேட்டர்கள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இது சுற்றுச்சூழல் மாசுபாட்டின் விதிகளை மீறுவதால் நிகழ்ச்சி நடக்கும் செட்டை இழுத்து மூட வேண்டும் என்று கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதனிடையே நிகழ்ச்சிக்கு எதிராக கஸ்தூரி கர்நாடக ஜனபார வேதிகேவைச் சேர்ந்த நிர்வாகிகள், ஸ்டூடியோ முன்பு போராட்டம் நடத்தினர். பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இதையடுத்து அரசு வாரியத்தின் உத்தரவு படி அதிகாரிகள் பிக் பாஸ் நடக்கும் செட்டிற்கு கடந்த 7ஆம் தேதி சீல் வைத்தனர். இதனால் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்த 17 போட்டியாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் போட்டியாளர்கள் அதே பகுதியில் உள்ள மற்றொரு ரெசார்ட்டிற்கு ரகசியமாக யாருக்கும் தெரியாமல் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக நிகழ்ச்சியை ஒளிபரப்பும் கலர்ஸ் தொலைக்காட்சி, சீல் வைத்த தினம் மன்னிப்பு கேட்டது. மேலும் தொலைக்காட்சியில் அன்றைய தினம் ஒளிபரப்பாகாது என்றும் அதற்கு பதிலாக ஜியோ ஹாட்ஸ்டாரில் எபிசோடை பார்க்கலாம் எனவும் அறிவித்தது. இதனிடையே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு வேலை பாதித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் கர்நாடக துணை முதல்வரின் தலையீட்டால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு போடப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிக் பாஸ் கன்னட நிகழ்ச்சி படமாக்கப்பட்டு வரும் பிடாடியில், ஜோலிவுட் வளாகத்தில் உள்ள சீலை அகற்றுமாறு பெங்களூரு தெற்கு மாவட்ட துணை ஆணையருக்கு உத்தரவிட்டேன். சுற்றுச்சூழல் இணக்கம் ஒரு முன்னுரிமையாக இருந்தாலும், கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மீறல்களை நிவர்த்தி செய்ய ஸ்டுடியோவிற்கு நேரம் வழங்கப்படும். கன்னட பொழுதுபோக்குத் துறையை ஆதரிப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான எங்கள் பொறுப்பையும் நிலைநிறுத்துகிறேன்” என நேற்று இரவு குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் சீலை அகற்றினர். இன்று அதிகாலை 3 மணியளவில் அகற்றியதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் நிகழ்ச்சி அங்கு மீண்டும் நடக்கவுள்ளது. 

Advertisment