சியா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விஜய் சுகுமார் இயக்கத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாண்புமிகு பறை’. இதில் காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக் ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ள இப்படம் பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, “அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்கிறது என்பார்கள். இங்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஶ்ரீகாந்த்தேவா தேசிய விருது வாங்கி தேவாவைக் கௌரவப்படுத்தியுள்ளார். அதே போல நாயகன் லியோ, அவர் அப்பா லியோனி போல அருமையாகப் பேசினார். பறை இசை நான் சின்ன வயதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் கேட்டுள்ளேன். அது சாவுக்காக அடிக்கும் பறை இல்லை, சாமிக்காக அடிக்கும் பறை. சாமியிடம் செல்வதால் அதை அடித்து வழியனுப்புகிறார்கள். ஆதி தமிழனின் முதல் இசை பறை.
ஃபாரினில் போய் நம் பாரம்பரியத்தைப் போற்றும் கதை எழுதி, அதைப் படமாக எடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். லியோனி அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆளுமை, அவர் பேச்சை நான் விரும்பிக் கேட்பேன். ஆணவக்கொலை என்பது எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்தே நடந்து வருகிறது. இன்னும் மாறவில்லை. அதனால் தான் ஆதரவு தரும் வகையில் திருமாவளவன் இந்த விழாவிற்கு வந்துள்ளார். எல்லோரும் மிகவும் கஷ்பட்டு இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி” என்றார்.
Follow Us