Advertisment

கழுதை இழுக்கவா சினிமாவுக்கு போன? - ஆரம்ப காலத்து கிண்டல் சம்பவத்தை பகிர்ந்த பாக்யராஜ்

477

திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு சால்வி அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர் அனைவருடனும் பாக்யராஜ் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

Advertisment

இந்த நிகழ்வில் கே. பாக்யராஜ் பேசுகையில், “சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய நண்பர்கள், எனது தாயார் என அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்து நான் சினிமாவில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று சொன்னார்கள். 16 வயதினிலே படத்தில் எனக்கு முதல் முறையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது, இதுவரை எந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கும் இப்படி நடந்தது இல்லை என்று கூறினார்கள். வாய்ப்பு தேடும் காலத்தில் பலரிடம் என்னுடைய உண்மையான பெயரை சொல்லாமல் கோவை ராஜா என்று கெத்தாக சொல்லிக் கொள்வேன். 16 வயதினிலே படத்தில் தான் என்னுடைய பெயரை பாக்கியராஜ் என்று வைத்தேன். என்னுடைய அம்மா எனக்கு வைத்த பெயர் இதுதான். டைட்டில் கார்டில் பார்த்துவிட்டு யார் இந்த பெயர் என்று என்னுடைய இயக்குனர் கேட்டார்கள். பிறகுதான் அது நம்முடைய ராஜன் என்று அனைவரும் சொன்னார்கள். அம்மாவின் பாக்கியத்தை இழந்து விடக்கூடாது என்பதால் கே. பாக்யராஜ் என்று வைத்துக் கொண்டேன். 

Advertisment

நான் துணை இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே பத்திரிக்கை நண்பர்கள் என்னை பற்றி எழுதி உள்ளீர்கள். கிழக்கே போகும் ரயில் படத்தின் போது என்னுடைய இயக்குனர் எனக்குப் பிறகு ராஜன் தான் என்று சொன்னார். துணை இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், பின்பு நடிகர் என படிப்படியாக வந்தேன். கிழக்கே போகும் ரயில் படத்தின் போது ஒரு கழுதையை கொண்டு வர வேண்டி இருந்தது. அப்போது நான் அதனை கொண்டு வந்தேன். அந்த புகைப்படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது. அதனை பார்த்து எனது குடும்பத்தினர் கழுதை இழுக்கவா சினிமாவுக்கு போன? என்று கிண்டல் அடித்தனர். அந்த சமயத்தில் எனது தாயார் உன்னுடைய இயக்குனரே உன்னை வரும் காலத்தில் வைத்து ஹீரோவாக படம் எடுப்பார் என்று சொன்னார். பிறகு அது உண்மையிலே நடந்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பு எனது தாயார் இறந்து விட்டார். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 

முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்த பிறகு இரண்டாவது படமான கன்னி பருவத்தில் வில்லனாக நடித்தேன். பிறகு இயக்குனராக அறிமுகமானேன். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. சினிமாவிற்கு வரும் முன்பு சினிமா பார்த்த அனுபவம் மட்டும் இருந்தது. மற்றபடி சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. இங்குள்ள இயக்குனர்களின் படங்களை பார்த்து தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பிறகு புத்தகத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதில் நான் பள்ளி முடித்து வந்தவுடன் எனது தாயார் தேன் மிட்டாய் வாங்க காசு கொடுப்பார். அதனை அருகில் உள்ள கடையில் கொடுத்து தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன். ஒருநாள் நான் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தேன், என் தாயார் இல்லை. உடனே நான் பெட்டியை திறந்து காசை எடுத்துக் கொண்டு தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். ஆனால் அன்று மாலை தான் எனக்கு தெரிந்தது நான் கொடுத்தது காசு இல்லை, தங்க மோதிரம் என்று. கடைக்காரர் நினைத்திருந்தால் மோதிரத்தை எடுத்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதனை எனது தாயாரிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். இந்த சம்பவம் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு சிறுவயதிலேயே உணர்த்தியது. 

எனது ஆசிரியர்கள் இன்றும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்களுக்கு செய்யும் நல்லதை பார்த்து அவருடைய குணாதிசயங்கள் என் மனதில் ஆழமாக பதிந்தது. சிவாஜியும் புது இயக்குநர் என்றாலும் இயக்குநருக்கான மரியாதையை கொடுப்பார். இவை அனைத்தும் என் மனதில் இருந்தது. கமலின் நடிப்பை இளம் வயதிலேயே பார்த்து ஆச்சரியப்பட்டேன். ரஜினி சாரை 16 வயதினிலே படத்தில் பார்த்தேன். அன்று பார்த்தது போல இன்றும் இருக்கிறார்” என்றார். 

k.bhagyaraj tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe