தமிழில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் மின்னலே படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படம், இளைஞர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கூட, கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு அப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைத்துள்ளது. அந்த அளவில் இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
இவரது அடுத்தடுத்த படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சாமி, அந்நியன், லேசா லேசா, அயன், ஆதவன், கோ, ஏழாம் அறிவு, நண்பன், அனேகன் மற்றும் காப்பான் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் இசையமைத்துள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம், வருகின்ற வெள்ளிக்கிழமையன்று (06-03-26) வெளியாக உள்ளது. இதனிடையே இப்படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ் பேசிய கருத்துக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது, "ஒரு படத்திற்குக் கதைக்களம் என்று ஒன்று அமைந்துவிட்டால் போதும், அதற்கு மிகப் பெரிய நட்சத்திரங்கள் தேவை என்பதெல்லாம் இல்லை. ஒரு நல்ல கதை அமைந்துவிட்டால் அது அனைவரையும் வேலை வாங்கிவிடும். எல்லோரையும் டெக்னீஷியன் ஆக்கிவிடும். அது சாதாரண நடிகர்களைக் கூட பெரிய நடிகர்களாகக் காட்டிவிடும்.
ஆனால், பெரிய நட்சத்திரங்களாகவே இருந்தாலும் மோசமான கதைகளில் நடித்தால், அவை ஒன்றுமில்லாமல் போய்விடும். கதை என்பது ஓர் அமைப்பு. அந்த அமைப்பு ஒவ்வொரு படத்திற்கும் மாறுகிறது. சில சமயங்களில், படத்தில் அனைவரும் மிகப் பெரிய கலைஞர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த அமைப்பு மட்டும் இல்லாத போது, அது வெற்றி பெறுவதில்லை. இதை நான் பார்த்திருக்கிறேன். எனவே, ஒரு படத்திற்குக் கதைக்களம் தான் முக்கியம்" எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us