இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் பல்வேறு மொழிகளில் படங்கள் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மொழிகளில் வெளியிடப்படுவது வழக்கம். சில வேளைகளில், குறிப்பிட்ட சில படங்கள் பிற மொழி மக்களால் ஈர்க்கப்பட்டு, அப்படம் பெருமளவில் கொண்டாடப்படுவதும் உண்டு. இது முன்பு இருந்த காலமாகும் . ஆனால் தற்போது, ஒரு படம் உருவாக்கப்படும் போதே அனைத்து மொழிகளுக்கும் ஏற்ப உருவாக்கப்படுகிறது. அதோடு, அந்த படங்கள் இந்திய முழுமைக்கும் திரையிடப்படுகிறது. மேலும், அவ்வாறு வெளியிடப்படும் பல படங்களும் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. இத்தகைய போக்குகளால் வெவ்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களாக இருந்த போதிலும், நாடு முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசிக்கும் படியான நிலை ஏற்பட்டுள்ளது. இது திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், இது திரைக்கலைஞர்களிடமும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.  

Advertisment

இருப்பினும், திரையுலகில் வேறு விதமான பிரச்சனைகள் தோன்றி,  நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் கலங்க வைக்கும் சம்பவங்களும் தற்காலத்தில் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், முன்பெல்லாம் திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடையே, படம் குறித்த விமர்சனங்களை பத்திரிக்கையாளர்கள் கேட்பது வழக்கம். இத்தகைய கருத்துகள் படம் பார்க்காத நபர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களை படத்தை பார்க்கத் தூண்டும் விதமாக அமையும். ஆனால், தற்காலத்தில் சில நபர்கள் உள்நோக்கத்துடன் திட்டமிட்டே சில குறிப்பிட்ட நடிகர்கள் அல்லது இயக்குநர்களின் படங்களுக்கு தவறான அல்லது உண்மைக்கு புறம்பான கருத்துக்களைத் சமூக ஊடகங்களில் தெரிவித்து, அந்த படத்தின் மீது  மக்களுக்கு தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். இதனால், நல்ல படைப்புகளும் மக்களிடம் சென்று சேராமல் போய்விடுகிறது. இது திரையுலகினருக்கு பெரும் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது.   

Advertisment

இந்த நிலையில்,  தெலுங்கில், அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள படம்  ‘மனசங்கர வரபிரசாத் காரு’ ஆகும்.  இப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. படம் மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும்,  படக்குழுவினர் எடுத்துள்ள ஒரு அதிரடியான முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் படத்தின் மீது வரும் எதிர்மறை விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, டிக்கெட் முன்பதிவு தளங்களில் யாருமே கருத்துகள், ஸ்டார்கள் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்யாதவாறு  நீதிமன்றம் மூலம் இப்படக்குழு தடை உத்தரவினை வாங்கியிருக்கிறது. இதனால் படத்திற்கான எதிர்மறை கருத்துகள் உள்ளிட்டவை பெருமளவு குறைய வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த முயற்சிக்கு சிலர் ஆதரவான கருத்துக்களையும், சில எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.