ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சைத்ரா, ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், இயக்குநர் கோபி நயினார், வாசு மித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் இதுவரை ‘எச காத்தா’ மற்றும் ‘ராசாத்தி ராசா’ ஆகிய பாடல்கள் வெளியாகின. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கிட்னி திருடும் கும்பலை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருப்பது தெரிய வந்தது.
இப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் இயக்குநர் பாலாவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “தயாரிப்பாளர் பெயர் அம்பேத்குமார்... படம் பெயர் மை லார்ட்... நல்ல காம்பினேஷன். தயாரிப்பாளருக்கு ஒன்னு சொல்லிக்கிறேன், ராஜ முருகனை வைத்து இன்னும் இரண்டு படங்கள் நீங்கள் எடுத்தால் உங்க ஆட்சியில் நீங்க அமைச்சரவையில் இடம் பெற்றுருவீர்கள். ஷான் ரோல்டனின் பாடல்கள் ரொம்ப திருப்தியா இருக்கு.
படம் இன்னும் நான் பார்க்கவில்லை, ஆனால் அந்த குற்ற உணர்ச்சியே இல்லாத அளவுக்கு மாரி செல்வராஜ் மொத்த டீடெயிலையும் இங்கு சொன்னார். அதைப் பார்க்கும்போது இந்தப் படம் எவ்வளவு பெரிய மரியாதைக்குரிய படமாக இருக்கும் என தெரிகிறது. அவர் பாராட்டினால் தரமான படமாகத்தான் இருக்கும் என என்னுடைய நம்பிக்கை. தன்னுடைய படங்களுக்கு இவ்வளவு நக்கலாக தலைப்பு வைக்க முடியும் என்றால் அது ராஜூ முருகனால் மட்டும் தான். ராசாத்தி ராசா பாடலில் சசிகுமார் நடனம் பயங்கரமாக இருந்தது. அதுவரை அப்படி ஒரு நடனத்தை நான் பார்த்ததே இல்லை, நல்ல வேலை மைக்கேல் ஜாக்சன் செத்துப் போயிட்டார்” என ஜாலியாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒருவேளை அந்த கேரக்டர் இப்படித்தான் ஆடும் என நிறைய ஹோம் ஒர்க் செய்து சசிகுமார் ஆடியிருப்பான் என நினைக்கிறேன். அது மட்டும் தான் எனக்கு ஒரு சந்தேகம். நமக்கு ஒரு மனிதர் பிடித்து விட்டால் அவர் செய்த படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அவருக்காக அந்த படம் நமக்கு பிடிக்கும். அது போல தான் சசியும். அவன் என்ன படம் பண்ணினாலும் தம்பி என்ற முறையிலும் சிஷ்யன் என்ற முறையிலும் எனக்கு அது பிடிக்கும். அதுதான் அவர் மேல் நான் வைத்திருக்கும் பாசம். படத்தில் நடித்திருக்கும் சுசிலா ரொம்ப தத்துவமாக நடித்திருக்கிறார். அவருடன் உண்மையாக நடிக்க தெரிந்த ஹீரோ இனிமேல் நடித்தால் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கிறேன், சுசிலாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவ்வளவு பிரமாதமாக அவர் நடிக்கக்கூடியவர். அவர் நடித்த கன்னட படம் ஒன்று பார்த்தேன். கிட்டத்தட்ட நான்கு நிமிடம் ஓடும் அந்த சிங்கிள் ஷாட் காட்சியில் அவ்வளவு ஆக்ரோஷமாக நடித்திருந்தார். அதைப் பார்த்து யார் இந்த நடிகை என யோசித்தேன். அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.
Follow Us