அமைதியான முகம், அடக்கமான பணிவு, கைகளை கட்டிக்கொண்டே வெள்ளை நிற உடையுடன் பெரும்பாலும் தென்படுபவர் ஏவிஎம் சரவணன். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் நிர்வகித்து வந்தார். 

Advertisment

வெற்றிப்பெறுவதை விட அந்த வெற்றிடத்தை தக்கவைப்பது மிகவும் கடினம் என சொல்வார்கள். அதை செவ்வன சிறப்பாக செயல்படுத்தி வந்தவர் ஏவிஎம் சரவணன். இவர்களது தந்தை ஏ.வி. மெய்யப்பனால் நிறுவப்பட்ட ஏ.வி.எம். நிறுவனம் சினிமாவில் கோலோச்சிய பிறகு அந்த வெற்றிடத்தை, பாரம்பரியம் சரியாமல் தூக்கி நிறுத்தியதில் ஏவிஎம் சரவணனுக்கு முக்கிய பங்கு உண்டு. இவருடன் இவரது சகோதரர்கள் எம்.குமரன், எம்.பாலசுப்ரமணியம் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisment

ஏவிஎம் நிறுவனம் இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 300க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. தந்தை மறைவிற்கு பிறகு சகோதரர்களுடன் சேர்ந்து நிறுவனத்தின் முழு பொறுப்பையும், தந்தை இருக்கும் போது துணை பொறுப்பையும் கவனித்து வந்தார். இவர் சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஈடுபாடு இல்லாமல் இருந்தார். ஆனால் தந்தை சினிமாவில் பயணிப்பதால் தனது 18வது வயது முதலே ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு, விநியோகிஸ்தம் என அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். காலப்போக்கில் அதிலே தனது மறைவு வரையும் பயணித்துள்ளார். 

எப்போதும் கைகள் கட்டியபடியே பேசும் இவர் சிறுவதியதில் இருந்தே அந்த பழக்கத்தை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் படங்களில், கதை விவாதத்தின் போது இவர் கூறும் பரிந்துரைகள் சரியானதாகவும் பொருத்தமானதாகவும் பின்னாளில் அமைந்திருக்கிறது. இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், உயர்ந்த மனிதன் படத்திற்கு யாரை நடிக்க வைக்கலாம் என விவாதம் நடந்த போது சிவாஜி பொருத்தமாக இருப்பார் என இவர் தான் பரிந்துரைத்தாராம். இப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது.

Advertisment

ரஜினி, கமல், விஜயகாந்த் என அன்றைய டாப் நடிகர்களின் பல வெற்றிப் படங்களை தயாரிக்க இவர் உறுதுணையாக இருந்துள்ளார். இவர் தயாரித்த முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, மிஸ்டர் பாரத் என ஏகப்பட்ட படங்கள் பெரும் வெற்றி கண்டது. இதைத் தொடர்ந்து இன்றைய டாப் நடிகர்களான விஜய்க்கு வேட்டைக்காரன், அஜித்துக்கு திருப்பதி, சூர்யாவுக்கு பேரழகன் மற்றும் அயன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். படங்கள் தயாரிப்பதை தாண்டி 25க்கும் மேற்பட்ட சீரியல்களையும் தயாரித்துள்ளார். இதில் ஆயிரம் எபிசோடுகளை கடந்த சீரியல்களும் உண்டு. சீரியலிலும் சினிமாவைப் போல மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாரித்திருக்கிறார். தொடர்ந்து இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப வெப் தொடர்களில் ‘தமிழ்ராக்கர்ஸ்’ என்ற வெப் தொடர் மூலம் கால் பதித்திருக்கிறார். அதைத் தாண்டி எழுத்தாளராகவும் புத்தகங்கள் மற்றும் தொடர்களும் எழுதியுள்ளார். மேலும் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 

தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை செய்த இவர், நேற்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவர் அணிந்திருக்கும் உடையை போல் வெள்ளை மனம் கொண்ட இவர், மன்னை விட்டு மறைந்துள்ளது திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.