வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் ஏற்கனவே காலம் காலமாக தொன்று தொட்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. இப்படியான ஹைதர் அலி காலத்து கதையான வங்கி கொள்ளை கதையை வைத்துக்கொண்டு இந்த முறை வித்தியாசமான கதை கொள்ளத்துடன் வெளியாகி இருக்கும் இந்த தணல் திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா? இல்லையா?
ஒரு மலை கிராமத்தை சேர்ந்த அஸ்வின் தலைமையிலான குழு ஒரே நேரத்தில் சென்னையில் இருக்கும் அனைத்து வங்கியில் இருந்தும் பணம் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். அதற்காக அவர்கள் ஒரு இடத்தை ஆக்கிரமித்து அந்த இடத்திற்கு அடியில் குழி தோண்டி அதன் மூலம் வியூகம் அமைத்து திருட திட்டமிடுகின்றனர். இதற்கிடையே போலீசாக வேலைக்கு சேரும் அதர்வா உள்ளிட்ட ஆறு போலீசுக்கு முதல் நாளே இந்த கொள்ளை சம்பவத்தை பற்றி தெரிந்து விட அவர்கள் இதை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என களத்தில் இறங்குகின்றனர். வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் அஸ்வின் அண்ட் டீம் யார்? அவர்கள் ஏன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்? அதர்வா அண்ட் டீம் இந்த கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்தினார்களா, இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.
படம் ஆரம்பித்து வழக்கமான படமாக காதல் குடும்பம் சென்டிமென்ட் என நகர்ந்து பின்பு போலீசாக மாறும் அதர்வா என அதன் பிறகு வேறு ஒரு பகுதிக்குள் கதை நுழைந்து விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இந்த வங்கி கொள்ளை திரைப்படமான தணல் திரைப்படம் மாறி இருக்கிறது. அதர்வா போலீசாகும் வரை மெதுவாக நகரும் திரைப்படம் அவர் போலீஸ் ஆன பின்பு வேகம் எடுத்து விறுவிறுப்பாக நகர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் என்ன நடக்கப் போகிறது என பரபரப்பாக சென்று இறுதி கட்டத்தில் வித்தியாசமான வங்கி கொள்ளை படமாக ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு குடிசைப் பகுதிக்குள் மாட்டிக்கொள்ளும் போலீசார் எப்படி வித்தியாசமான முறையில் பூமிக்கு அடியில் டனல் அமைத்து அதன் மூலம் வங்கியை கொள்ளை அடிக்க நினைக்கும் திருடர்களை லாவகமாக பிடித்தார்கள் என்ற விஷயத்தை வைத்துக்கொண்டு அதன் மூலம் நேர்த்தியான முறையில் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக கூறி இருக்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா. போலீசார் ட்ராப்பில் மாட்டிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக திருடர்களிடம் மாட்டி இறக்கின்றனர். அதிலிருந்து நாயகன் எப்படி மற்றவர்களை காப்பாற்றி அதேசமயம் கொள்ளை சம்பவத்தையும் தடுத்து நிறுத்தினாரா இல்லையா என்பதை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான முறையில் கதை சொன்ன இயக்குனர் கதையில் இருக்கும் சில பல லாஜிக் ஓட்டைகளையும் சரி செய்து அடைத்திருக்கலாம். அந்த லாஜிக் ஓட்டைகள் கடைசிவரை துருத்திக்கொண்டு கிளைமாக்ஸ் இல் பிரதிபலித்திருப்பது சற்றே மைனஸ். அதேபோல் இறுதி கட்டத்தில் சொல்ல வந்த விஷயம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுப்புகிறது. அது ஒரு பக்கம் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருந்தாலும் சொல்ல வந்த விஷயம் எவ்வளவு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது போகப் போக தான் தெரியும். இந்த காலத்தில் போலீசார் மீது மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி இருக்கிறது. அது இந்த படத்தில் தெள்ளத் தெளிவாக தெரிவது சிறப்பாக இருந்தாலும் அதற்கான ரிசல்ட் இயக்குனர் தன் பாயிண்ட்ஸ் ஆப் யூ வில் கூறியிருப்பது எந்த அளவு ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது என்பது போகப் போக தான் தெரியும். அதுவே படத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் படியாக இருக்கிறது.
நாயகன் அதர்வா வழக்கம் போல் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். போலீசுக்கு உரித்தான மிடுக்குடன் நடித்திருக்கும் அவர் காதல் காட்சிகளிலும் சாக்லேட் பாயாக மிளிர்கிறார். நாயகி லாவண்யா திருப்பதி கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். வழக்கமான நாயகியாக வரும் அவர் வழக்கமான முறையில் நாயகிகள் என்ன செய்வார்களோ அதையே செய்துவிட்டு சென்றிருக்கிறார். இன்னொரு நாயகனாக படத்தில் அஸ்வின் சிறப்பான முறையில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவரது வில்லத்தனம் நிறைந்த ஹீரோயிசம் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இறுதிக்கட்ட காட்சிகளில் அதர்வாவுக்கு ஈக்குவலாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவரது மனைவி ஆக வரும் லட்சுமி பிரியா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். அதர்வாவின் நண்பர்களாக வரும் பரணி ஷா ரா ஆகியோர் சிறப்பான முறையில் நடித்து வலு சேர்த்து இருக்கின்றனர். அதேபோல் இவர்களுடன் நடித்த மற்ற போலீஸ் கதாபாத்திரங்களும் சிறப்பான முறையில் நடித்து சிறப்பு சேர்த்திருக்கின்றனர். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவர் ஒரு வேலையை நிறைவாக செய்திருக்கின்றன.
சக்தி சரவணன் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளும் நேர்த்தியாக படம் பிடித்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே.
ஏழை விவசாயிகளை கார்ப்பரேட் உடன் இணைந்து அரசியல்வாதிகள் போலீஸ் மற்றும் பேங்க் ஆகியவை ஏமாற்றுகிறது. அதிலிருந்து மீள முடியாத விவசாயிகள் எடுக்கும் விபரீத முடிவே அந்த பேங்க் கொள்ளை. அந்த பேங்க் கொள்ளை மூலம் தங்களை ஏமாற்றியவர்களை தண்டிக்கவும், அதேசமயம் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யவும் முடிவெடுக்கும் விவசாயிகளின் தலைவன் அஸ்வின் அதை நேர்த்தியான முறையில் செய்யும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்துவதை பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக காண்பித்து, அவர்களுக்கான நியாயத்தையும் அழுத்தமாக கேட்டுவிட்டு, அதே சமயம் கார்ப்பரேட்டுக்கு துணை நின்ற போலீசுக்கும் ஒரு சேர சப்போர்ட் செய்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாமல் இருப்பது படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் பேங்க் கொள்ளை சம்பந்தப்பட்ட கதையை வித்தியாசமான முறையில் விறுவிறுப்பாக காண்பித்திருப்பது படத்தை ஓரளவுக்கு தேற்றி இருக்கிறது.
தணல் - டனல் என வைத்திருக்கலாம்!