வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு கைவசம் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என வைத்துள்ளார். இதில் தேசிங் பெரியசாமி படம் சிம்புவின் 50ஆவது படமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த அப்டேட்டும் தற்போது இல்லாமல் இருக்கிறது. ஆனால் அவரது 51வது படமாக அறிவிக்கப்பட்ட அஷ்வத் மாரிமுத்து படம் தொடர்ந்து அடுத்த கட்ட பணிகளில் நகர்ந்து வருகிறது.
முன்னதாக வெளியான அறிவிப்பு போஸ்டரில் ‘காட் ஆப் லவ்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் காதல் ஃபேண்டஸி ஜானரில் படம் உருவாகிறது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு ‘ஐ’ என்ற எழுத்தில் ஆரம்பிப்பதாக வைக்கப்பட்டுள்ளது. படப் போஸ்டரே எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் சமீபத்தில் பட நாயகியாக மிருணாள் தாகூரை படக்குழு அணுகி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதே போல் இசையமைப்பாளராக அனிருத்தை கமிட் செய்துள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
சமீபத்தில் அஷ்வத் மாரிமுத்து, சிம்பு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் விரைவில் சிம்பு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படம் குறித்து நிறைய விஷயங்களை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட அவர், மேடையில் பேசும்போது, “இந்த படத்தில் ஒரு அற்புதமான கதை இருக்கிறது. அதாவது சொர்க்கம் என்றால் என்ன என்பதே இப்படத்தின் மையக்கரு. டிராகன் படத்தில் படிப்பு பற்றியும் ஒரு தவறு செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்பதையும் பேசினோம். அந்த மாதிரி சொர்க்கம் என்றால் என்ன என்பதை சொல்லும் படமாக இது இருக்கும். இந்த படத்தில் சந்தானம் இருக்கிறார். அதனால் சிம்பு - சந்தானம் காம்போ வருகிறது. இசையமைப்பாளர் உங்களுக்கு பிடித்தவர்தான். ஹீரோயின் இப்போதைக்கு சொல்ல முடியாது. பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால் நிறைய ஹீரோயின்ஸ் இருக்கிறார்கள். அது தவிர இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. ஆனால் அதை இன்னொரு தருணத்தில் சொல்கிறேன்” என்றார்.
சிம்பு - சந்தானம் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவிருந்தனர். அதாவது சந்தானம் ஹீரோவாக மாறியப் பிறகு எந்த படத்திலும் காமெடி ரோலில் நடிக்காமல் இருந்த நிலையில் இப்படத்தில் இணைந்ததால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அப்படம் பூஜைக்கு பிறகு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/384-2026-03-06-18-18-40.jpg)