‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வரும் நடிகர் அருண் விஜய் இந்த முறை ‘ரெட்ட தல’ படம் மூலம் கோதாவில் குதித்து இருக்கிறார். தடம் படத்திற்கு பிறகு இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அருண் விஜய்க்கு இந்த படம் எந்த அளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது? 

Advertisment

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாண்டிச்சேரிக்கு வரும் வேலை வெட்டி இல்லாத அருண் விஜய் தன் காதலி சித்தி இட்னாணியை சந்திக்கிறார். பேராசை பிடித்த நாயகி அருண் விஜய்யை மறுக்கிறார். அந்த சமயம் அருண் விஜய் தன்னை போலவே இருக்கின்ற மற்றொரு அருண் விஜயை எதேர்ச்சியாக சந்திக்கிறார். காதலியின் பேராசைக்காக வேலை வெட்டி இல்லாத அருண் விஜய் சித்தி இட்னானியுடன் இணைந்து திட்டம் தீட்டி பெரும் பணக்காரராக இருக்கும் மற்றொரு அருண் விஜயை கொலை செய்துவிட்டு அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். எப்படியோ நம் வாழ்க்கை ராஜவாழ்க்கையாக மாறிவிட்டது காதலியும் கிடைத்துவிட்டால் என்ற சந்தோஷத்தில் இருக்கும் அருண் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த அதிர்ச்சி என்ன? கொலை செய்யப்பட்ட அருண் விஜய் யார்? அவரால் இந்த அருண் விஜய்க்கு என்ன ஆபத்து? அதிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே இந்த படத்தின் மீது கதை. 

Advertisment

வித்தியாசமான கதைகளத்தை யோசித்து அதற்கேற்றார் போல் ஹாலிவுட் தரத்தில் திரைக்கதை அமைத்து படத்தை கொடுத்திருக்கிறார் மான் கராத்தே புகழ் இயக்குநர் திருக்குமரன். முழுக்க முழுக்க உலகத்தரம் வாய்ந்த படமாக மிகவும் ரிச்சான படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறி இருக்கிறார். படம் ஆரம்பிக்கும் பொழுது இருக்கும் விறுவிறுப்பு போக போக அப்படியே மங்கி, பின் இறுதி கட்ட காட்சிகளில் வேகம் எடுத்து நிறைவாக படம் முடிகிறது. திரைக்கதையில் இன்னமும் கூட வேகம் தேவை. அதேபோல் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் ஏதோ காண்பித்து எப்படி எப்படியோ கதைகளத்தை நகர்த்தி அதன் மூலம் படத்தை ரசிக்க வைக்கவும் முயற்சி செய்திருக்கிறார். மற்றபடி படம் எடுத்த விதம் அதில் நடித்த நடிகர்கள் என மற்ற விஷயங்கள் சிறப்பாக அமைந்து அதுவே ஆறுதலாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. 

அருண் விஜய் வழக்கம் போல் தனது சிறப்பான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பில்லா அஜித் போல் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார். இரண்டு கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் உடல் அமைப்பையும் சிறப்பாக கட்டுக்கோப்பாக அமைத்து அதற்கேற்றார் போல் தன் நடிப்பையும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் கொடுத்து கவர்ந்திருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி சித்தி இட்னாணி கிரே ஷேடில் வரும் நாயகியாக நடித்து கவர்ந்திருக்கிறார். படத்தில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை ஆனால் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

Advertisment

போலீஸாக வரும் ஜான் விஜய் கலகலப்பான க்ரைம் போலீசாக நடித்து கலக்கி இருக்கிறார். வில்லனாக வரும் ஹரிஷ் பேரோடி வழக்கமான வில்லத்தனம் காட்டிவிட்டு சென்று இருக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் சில காட்சிகளே வந்து கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். 

டீஜோ டாமி ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம் மற்றும் உலகத்தரம். ஒவ்வொரு காட்சியையும் ஹாலிவுட் தரத்தில் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார். சாம் சி எஸ் வழக்கம்போல் அவரது இரைச்சலான இசை மூலம் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறார். கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் வாசித்து தள்ளி காதுகளை மூட வைத்திருக்கிறார். இருந்தும் சில இடங்களில் சிறப்பாகவும் இசை கொடுத்திருக்கிறார். அதேபோல் கண்ணம்மா பாடல் ஹிட் ரகம். அந்தப் பாடல் சிறப்பாக அமைந்து படத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. 

இரண்டு அருண் விஜய் கேரக்டர்களை வைத்துக்கொண்டு அதன்மூலம் விறுவிறுப்பான படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குநர் திரைக்கதையில் இன்னமும் கூட கவனமாக செயல்பட்டு இருந்தால் இந்த படம் நிச்சயம் சிறப்பான படமாக அமைந்திருக்கும். ஒருவன் கெட்டவன் இன்னொருவன் அதைவிட பெரிய கெட்டவன் என்ற வித்தியாசமான கதையை தேர்வு செய்த இயக்குநர் திரைக்கதையை இன்னும் வித்தியாசமாக கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.


ரெட்ட தல - ஸ்டைலிஷ் கேங்ஸ்டர்ஸ்!