பாலிவுட்டில் புகழ்பெற்ற பாடகர் அர்ஜித் சிங். எந்தப் பாடல் வெளியானாலும் இவரது குரலில் அப்பாடல் எப்படி இருக்கும் என்று ரசிகர்களை யோசிக்க வைக்கும் அளவிற்கு இவரது குரல் பிரபலமானது. இவர் இதுவரை இந்தியை தாண்டி தமிழ் பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மராத்தி என மொத்தம் 10 இந்திய மொழிகளில் 700 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ‘ஆஷிக் 2’ படத்தில் இவர் பாடிய ‘தும் ஹி ஹோ’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தவிர்த்து பல்வேறு ஹிட் பாடல்கள் அவர் பாடியுள்ளார். 

Advertisment

பாடுவதை தாண்டி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்தி மற்றும் பெங்காலியில் 25க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துள்ளார். தமிழில் ஜெய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘புகழ்’ படத்தில் ‘அடடா என்ன அழகு’ எனும் பாடலை பாடியிருக்கிறார். மேலும் சூர்யா நடிப்பில் வெளியான ‘24’ படத்தில் ‘நான் உன் அழகினிலே’ பாடலை பாடியுள்ளார். இதை தவிர்த்து பாலிவுட் படமான ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் தமிழ் வெர்ஷனில் ‘தேவா தேவா’ எனும் பாடலை பாடியிருக்கிறார். இவர் இதுவரை 2 தேசிய விருதும் 8  ஃபிலிம் ஃபேர் விருதுகளும் வாங்கியுள்ளார். இசையில் இவரது பங்களிப்பை பாராட்டி பத்மஸ்ரீ விருது கடந்த ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில் இவர் பாடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “இத்தனை ஆண்டுகளாக எனக்கு அன்பை கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இனிமேல் நான் பாடப்போவதில்லை. அதிலிருந்து விடைபெறுகிறேன். இந்தப் பயணம் ஒரு அற்புதமானது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் நல்ல இசையின் ரசிகன், எதிர்காலத்தில் ஒரு சிறிய கலைஞராக நானே மேலும் கற்றுக்கொண்டு, இன்னும் பலவற்றை செய்யவுள்ளேன். நான் இன்னும் சில முடிக்கப்படாத கமிட்மெண்டுகள் இருக்கிறது. அதை விரைவில் முடித்துவிடுவேன். அதனால், இந்த ஆண்டு எனது படைப்புகள் வெளியாகும். நான் இசை உருவாக்குவதை நிறுத்த மாட்டேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார். இவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.