இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவி - அறிமுக இயக்குநர் அர்ஜுனனின் ‘ஜீனி’, பிரபு தேவா - மனோஜின் ‘மூன் வாக்’ மற்றும் எஸ்.ஜே.இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திலும் கமிட்டாகியுள்ளார். 

Advertisment

இந்நிலையில் பாலிவுட் குறித்து பிரபல ஆங்கில ஊடகத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “பாலிவுட்டில் படைப்பாற்றல் இல்லாத மனிதர்கள் கையில் அதிகாரம் சென்றுள்ளது. அவர்கள் தான் யார் இசையமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் இந்த மாற்றம் மிகப்பெரியதாக இருக்கிறது. நான் வேலைக்காக யாரையும் தேடி செல்வதில்லை. வேலையில் இருக்கும் நேர்மை தான் எனக்கு வாய்ப்புகளை தேடித் தருகிறது. எனக்கு வாய்ப்புகள் குறைவதற்கு மத ரீதியான பாகுபாடு காரணமாக இருக்கலாம். ஆனால் அது என் முகத்துக்கு நேராக நடந்ததில்லை. ஆனால் அது போன்ற தகவல்கள் என் காதுக்கு வருகிறது. 

Advertisment

90களில் ரோஜா, பம்பாய், தில் சே போன்ற படங்களை விட ‘தாள்’ படம் தான் வட இந்தியாவில் என்னுடைய இசையை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்தது. ஆனால் அப்போது நான் இந்தி பேசியதே இல்லை. ஒரு தமிழராக தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால் இந்தி கற்றுக் கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் இயக்குநர் சுபாஷ் கய் என்னை நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று இந்தி கற்றுக்கொள்ள சொன்னார். நானும் சரி என சொல்லி இந்தியோடு சேர்த்து இந்திக்கு தாயாக விளங்கும் உறுதி மொழியையும் கற்றுக் கொள்கிறேன் என்றேன்” என்றார். 

அதே பேட்டியில் சாவா படம் குறித்த விமர்சனங்கள் குறித்தும் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “விமர்சனங்கள் எப்போதும் வருவது தான். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும்.
சாவா பிரிவினையைப் பேசும் படம்தான். அதை வைத்து அப்படம் பணம் சம்பாதித்தது. ஆனால், வீரத்தைக் காட்டுவது தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன். இப்படத்திற்கு நான் ஏன் தேவை? என அதன் இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு ‘நீங்கள் மட்டும்தான் இப்படத்திற்குத் தேவை’ என்று சொன்னார்” என்றார். 

Advertisment