சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50’ என்ற பாராட்டு விழா நேற்று (13.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இளையராஜாவுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிலையில் தமிழக அரசின் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள வீடியோவில், “இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனிப் பெருமையைத் தேடித் தந்தவர் இளையராஜா.
இமாலய சாதனையும் எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதரும் ஆவார். சாஸ்திரீய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை இவற்றிற்கிடையே நிலவிய வேறுபாடுகளைத் தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசைமேதை அவர். குறிப்பாக திரையிசையைக் கடந்து முழுமையான மேற்கத்தியச் செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தியிருக்கும் இருக்கும் சிம்பனி என்ற சாதனை ஒவ்வொரு இசைக் கலைஞர்களுக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்குமளிக்கக்கூடிய சாதனையாக இருக்கிறது.
அவரை பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எப்போதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் உங்களைப் போலவே நானும் பெருவகை கொள்கிறேன். இளையராஜாவின் பொன்விழா ஆண்டை தமிழ்நாட்டு அரசே ஒருங்கமைத்துக் கொண்டாடுவதை இளையராஜாவுக்கு மட்டுமான விழாவாக அல்லாத ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே” எனத் தெரிவித்துள்ளார்.