சமீப காலங்களாக நாயகிகள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன. அந்த வரிசையில் தமிழில் முதல் முறையாக அனுபமா பரமேஸ்வரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் இந்த ‘லாக் டவுன்’ திரைப்படம் எந்த அளவு வரவேற்பு பெற்று இருக்கிறது? 

Advertisment

அனுபமா பரமேஸ்வரன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக தன் அப்பா சார்லி, அம்மா நிரோஷாவுடன் வாழ்ந்து வருகிறார். வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு இருப்பதால் தனக்கு ஏற்றார் போல் ஒரு வேலையை தேடி வருகிறார். அந்த சமயம் தனது தோழி ஒரு ரெசார்ட்டுக்கு வரும்படி அழைக்க அங்கு சென்ற அனுபமா பரமேஸ்வரன் தோழியின் நண்பரை சந்திக்கிறார். அவரும் இவருக்கு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து பார்ட்டியில் கலந்து கொள்ள வற்புறுத்துகிறார். அனுபமாவும் ஆரம்பத்தில் தவிர்த்து விட்டு பின் வேலை கிடைத்துவிடும் சந்தோஷத்தில் மனம் மாறி பார்ட்டியில் கலந்து கொண்டு ஆண் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு கூத்தும் கும்மாளமுமாக இருக்கிறார்.

Advertisment

பின்னர் அனுபமாவுக்கும் தன் நண்பர் கூறியது போல் வேலையும் கிடைத்துவிடுகிறது. அந்த சமயம் எதிர்பாராத விதமாக அனுபமா பரமேஸ்வரன் கர்ப்பமாகிறார். அந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் எனத் தெரியாததால் மிகப்பெரும் அதிர்ச்சி அவருக்கு ஏற்படுகிறது. அந்த கர்ப்பத்தை மிகவும் ஆர்த்தடக்ஸ் குடும்பமாக இருக்கும் தன் வீட்டுக்கு தெரியாமல் எப்படியாவது கலைத்து விட வேண்டும் என அனுபமா முயற்சி செய்ய அந்த நேரம் பார்த்து நகரம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக லாக் டவுன் அமலுக்கு வந்து விடுகிறது. இதைத் தொடர்ந்து வெளியே கூட போக முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் அந்த சமயத்தில் அனுபமா அந்த கர்ப்பத்தை கலைத்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

இன்றைய கால ஜென்-சிகளுக்கு தகுந்தார் போல் ஒரு சிம்பிளான கதையை இரண்டரை மணி நேர படமாக இழுத்து கொடுத்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஏ ஆர் ஜீவா. ஒரு குறும்படத்திற்கு தேவையான கதையை வைத்துக் கொண்டு 2 மணி நேர படமாக கொடுக்க முயற்சி செய்த அவர், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அதாவது காட்சிகளில் புதுமையை புகுத்தி திரைக்கதையிலும் வேகத்தை கூட்டி இன்னமும் ஒரு விறுவிறுப்பான படமாக கொடுத்திருக்கலாம். ஆரம்பத்தில் ஒரே இடத்தில் நகரும் திரைப்படம் அங்கிருந்து நகராமல் அப்படியே இழுவையாக இழுத்து போகப் போக சென்று பின்னர் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பான படமாக நகர்ந்து முடிந்து இருக்கிறது. கதையிலும் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் தென்படுவது படத்திற்கு சற்று பயிற்சி கொடுத்திருக்கிறது. கதை சொன்ன விதமும் கதை மாந்தர்களும் உணர்வுபூர்வமாக இருப்பது சற்று படத்திற்கு பிளஸ்-ஸாக அமைந்து அதுவே ஆறுதலும் கொடுத்திருக்கிறது. 

Advertisment

நாயகி அனுபமா பரமேஸ்வரன் தனக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் உணர்வுபூர்வமாக நடித்து அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். தந்தையாக சார்லியும் தாயாக நிரோஷாவும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். இவர்களின் உணர்வுபூர்வமான அனுபவ நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. அனுபமாவின் தோழியாக வரும் பிரியா வெங்கட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி உடனடித்த லிவிங்ஸ்டண், லொள்ளு சபா மாறன், இந்துமதி, ராஜ்குமார், சம்ஜி, பிரியா கணேஷ், ஆஷா, உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர்.

கே ஏ சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விப்பின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒரு குறும்படத்திற்கு போதுமான கதையமைப்பை எடுத்துக்கொண்டு அதை முழு நீள திரைப்படமாக மாற்ற முயற்சி செய்த இயக்குநர் கதையிலும் திரை கதையிலும் இன்னமும் கூட திருப்பமும் விறுவிறுப்பையும் சேர்த்து கொடுத்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பாக பேசப்பட்டு இருக்கக்கூடிய படமாக மாறி இருக்கும். குறிப்பாக சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு சமூக கருத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் அதை புரியும்படி சொன்ன விதம் அருமை. ஆனால் இன்னமும் கூட விறுவிறுப்பாக அதை கூறி இருந்தால் படம் இன்னுமும் அதிக வரவேற்பை பெற்று இருக்கும். 

லாக் டவுன் - அவலம்!