மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.55 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராடியிருந்தார். இந்த நிலையில் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு குறித்து பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் நெகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்ததாவது, “பைசன் வெளியாகி 10 நாட்கள் ஆகிறது. இந்த நாட்களில் படத்திற்காக கிடைத்த அன்பை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்று என் இதயம் கற்றுக் கொண்டே இருக்கிறது. சில படங்கள் வெறும் படமாக மட்டும் இருக்காது. அது ஒரு உணர்வாகவும் மாறும். அப்படித்தான் எனக்கு பைசன்.
வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் விதத்தில் என்னை பாதித்த படம். இந்தப் பட உலகில் வாழ்ந்ததற்காக நான் பாக்கியசாலியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன். மாரி செல்வராஜ் சார்... என்னை தேர்ந்தெடுத்ததற்காக நன்றி. உங்கள் நம்பிக்கையை நான் எப்போதும் நன்றியுடன் சுமப்பேன். நமது சூப்பர் ஸ்டார் துருவ் விக்ரமுக்கு வாழ்த்துக்கள். உங்களது நேர்மையும் அர்ப்பணிப்பும் இன்ஸ்பயிரிங்காக இருக்கிறது. அவருக்கு இது அதிர்ஷ்டம் அல்ல, அவரே உருவாக்கியது. அவர் மீது படும் வெளிச்சத்துக்கு அவர் தகுதியானவர். ரஜிஷா விஜயன், சக நடிகையாக இருந்ததற்கும் சகோதரியின் அரவணைப்பிற்கும் நன்றி.
நிவாஸ் கே பிரசன்னா என்ன ஒரு அழகான தொடக்கம். இந்த மேஜிக்கை பிடித்துக் கொள்ளுங்கள், அது உங்களை வெகு தூரம் அழைத்துச் செல்லும். ஒரு பெரிய கனவின் சிறிய பகுதியாக என்னை அனுமதித்ததற்கு அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீளம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பார்வையாளர்களுக்கு வாழ்த்துக்கள். உண்மையுடன் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை ஏற்றுக் கொண்டதற்கும் அதை இவ்வளவு மென்மையுடன் கொண்டாடியதற்கும் திரையரங்கில் மட்டும் இல்லாமல் உங்கள் மனதிலும் இடம் அளித்ததற்கும் நன்றி. பைசன் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் நேர்மையாகவும் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us