பாலிவுட்டில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் மூத்த நடிகர் அன்னு கபூர். நடிப்பதை தாண்டி இயக்குநராகவும் ஆர்.ஜே-வாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது தமன்னா குறித்து அவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையாகி உள்ளது. 
 
அந்த பேட்டியில் ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்ட ‘ஆஜ் கி ராத்’ பாடலை குறித்து தொகுப்பாளர் அன்னு கபூரிடம் காண்பித்து அப்பாடல் குறித்தும் தமன்னா குறித்தும் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “அய்யோ கடவுளே... அவருக்கு என்ன பால் போன்ற உடல் இருக்கிறது” என்றார். இதையடுத்து தொகுப்பாளர், தமன்னா முன்பு கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்டார். அதாவது, இப்பாடலைப் பார்த்து தான் குழந்தைகள் தூங்குகிறார்கள் என தாய்மார்கள் கூறியதாக தமன்னா கூறியதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். 

Advertisment

இதற்கு பதில் சொன்ன அன்னு கபூர், தமன்னாவை சகோதரி எனக் குறிப்பிட்டு, “அவர் தன் பாடல் மூலம், பால் போன்ற முகம் மற்றும் உடலால் குழந்தைகளை தூங்க வைக்கிறார். நம் குழந்தைகளை இனிமையாகத் தூங்க வைக்கிறார் என்றால், அது மிகவும் நல்லது. நம் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறுவது இந்த நாட்டிற்கு ஒரு பெரிய ஆசீர்வாதம். அவருக்கு வேறு எதாவது விருப்பங்கள் இருந்தால், அதை நிறைவேற்றக் கடவுள் அவருக்குத் திறமையைக் கொடுக்கட்டும். இதுதான் அவருக்கு என்னுடைய ஆசீர்வாதம்” என்றுள்ளார். 

Advertisment

இதற்கு சமூக வலைதளங்களில் ஒரு மூத்த கலைஞர் இப்படி ஆபாசமாக வர்ணிப்பதா என்றும் கொஞ்சம் கண்ணியமாக வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பயனர்கள் விமர்சித்து வருகின்றனர். அன்னு கபூருக்கு 69வது வயது என்பது குறிப்பிடத்தக்கது.