விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில் யு/ஏ சான்றிதழ் வழங்கக்கோரி நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிபதி ஆஷா வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனிடையே படத் தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதன் விசாரணை விரைவில் வரவுள்ளது.
இப்படம் படப்பிடிப்பில் இருந்த போதே, அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணன் நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என ஒரு தகவல் உலா வந்தது. ஆனால் இப்படம் ரீமேக் இல்லை எனவும் முழுக்க முழுக்க விஜய் படம் எனவும் இயக்குனர் வினோத் இசை வெளியீட்டு விழாவில் தெளிவுபடுத்தியிருந்தார். அதே போல், பகவந்த் கேசரி பட இயக்குநர் அனில் ரவிப்புடியிடம், படம் வெளிவந்தால் தான் தெரிய வரும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் ஜன நாயகன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பகவந்த் கேசரி படத்தின் பல காட்சிகளை நினைவுபடுத்தியது. பலரும் இரண்டு படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் அனில் ரவிப்புடி மீண்டும் ரீமேக் தொடர்பாக பேசியுள்ளார். ஒரு பேட்டியில் பேசிய அவர், “ஜன நாயகன் படக்குழு பகவந்த் கேசரியின் அடிப்படை சாரம்சத்தை எடுத்துக் கொண்டுள்ளனர். படத்தின் முதல் 20 நிமிடங்கள், இடைவேளை மற்றும் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் போன்றவற்றை எடுத்துள்ளனர். இருப்பினும், படத்தில் ரோபோக்கள் போன்ற அறிவியல் புனைக்கதைகளை சேர்ப்பதற்காக, வில்லனின் கதாபாத்திரம் மற்றும் அவனது நோக்கத்தை முழுவதுமாக மாற்றியுள்ளனர். பகவந்த் கேசரியில் உள்ள பல அம்சங்கள் விஜய்க்குச் சாதகமாக அமையும் என்பதால், அவருக்கு ஜன நாயகன் வெற்றிப் படமாக அமையும். யார் என்ன சொன்னாலும், என் படத்தின் ஆன்மா ஜன நாயகன் படத்தில் இருக்கிறது. அதை நான் உறுதியாக நம்புகிறேன். விஜய்யின் பங்களிப்புடன் அது சிறப்பாக மாறும்” என்றார்.
Follow Us