மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது

Advertisment

இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் அமீர் கலந்து கொண்டு பேசுகையில், “பத்திரிக்கையாளர்கள் ஒரு கேள்வியை திரும்பத் திரும்ப மாரியிடம் கேக்குறாங்க. நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? நீங்க சமூகத்துக்குள்ள ஒரு பிரச்சனையை உண்டு பண்ணனும்னு நினைக்குறீங்கன்னு சொல்றாங்க. இது எவ்வளவு அபத்தமான ஒரு கேள்வி. கண்ணுக்கு தெரியாத சாமி... இல்லாத பேய்.... இது ரெண்ட பத்தியும் இங்க நிறைய சினிமா வந்து வெற்றி அடைஞ்சுக்கிட்டே இருக்கு. சாமியை யாரும் பார்த்ததே கிடையாது. அதை பத்தி படம் எடுத்தா கொண்டாடுறாங்க. பேய், அது இல்லவே இல்ல. ஏன்னா பேய விட மனுஷ ரொம்ப மோசம்னு நான் நினைக்கிறேன். எந்த பேய்னாலும் எந்த தொந்தரவும் கிடையாது. ஏன்னா அதுவே ரொம்ப பயந்தது தான். ஏன்னா அது பகல்ல வரவே வராது. நைட்டுல மட்டும் தான் வரும். பகல்ல வந்தா ஆளுங்க நிறைய இருப்பாங்கன்னு பயந்துட்டு ஓடிரும். இது ரெண்ட பத்தியும் படம் எடுக்கலாம். ஆனா கண்ணுக்கு தெரிஞ்ச சாதிய, அது ஏற்படுத்துகிற தீமைகள், அதனால் ஏற்பட்ட வலிகள், கொடுமைகளை ஒருத்தன் படம் எடுக்கக்கூடாது என்ற கேள்வியை முன் வைக்கும் போது தான் எனக்கு ரொம்ப அபத்தமா இருக்கு.

Advertisment

அவர் ஒரு படம் எடுத்து ஒரு கருத்தை சொல்றாரு. அந்தக் கருத்துக்கு உங்ககிட்ட எதிர் கருத்து இருந்தா நீங்களும் சொல்லுங்க. அதைவிட்டுட்டு படமே எடுக்கக்கூடாது, ஏன் எடுக்குறீங்க? என்ற கேள்வி ரொம்ப ஆபத்தானது. மாரி படங்களுக்கும் ரஞ்சித் படங்களுக்கும் பொது வெளியில அரசியல் சார்ந்தவங்க கருத்து தெரிவிக்கிறாங்க. அதுல சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கிறாங்க. ஆனா அதுல ஒரு நியாயம் இருக்குறதா நான் பார்க்குறேன். ஒன்னு, ரொம்ப நாளா அடிச்சிட்டோம். அப்படியே அடி வாங்கிட்டே இருந்தவன், திடீர்னு எங்கிருந்து வருது இந்த தைரியம் அப்டீன்ற கேள்வியா இருக்கலாம். இல்ல நடந்தது நடந்து போச்சு. அதை எல்லாம் ஏன் வெளியில சொல்ற? நாங்க எல்லாம் பெரிய மனுஷனாவே வாழ்ந்துட்டோம், அப்படின்ற எண்ணமா இருக்கலாம். அது அரசியல் சார்ந்தவர்கள். அந்த அமைப்பு சார்ந்தவர்கள் சொல்றாங்கன்னா அதுல ஒரு லாஜிக் இருக்கு.

ஆனா திரைத்துறையிலிருந்து வருகிற எதிர்ப்பு இருக்கு பாத்தீங்களா? அது ரொம்ப அபத்தமா பார்க்குறேன். அதுலையும் ஒரு இயக்குநர் ஒரு தொலைக்காட்சி ஊடகத்துல இந்த திரைப்படத்தை பற்றி பேசும் போது ஒரு பாடல் பாடி காமிக்கிறார். ரொம்ப கேவலமாகவும் குரூரமாகவும் பைசன் பைசன் பைசன், அது ஒரு பாய்சன் பாய்சன் பாய்சன்ன்னு பாடுறார். அந்த குரலே நாராசமா இருக்கு. மாரி செல்வராஜ் ஒரு கருத்து வச்சிருக்காரு. அதை ஒரு கலைவடிவமா எடுத்துட்டு ஒரு அரசியல் சொல்றாரு. அவர் மாதிரியே உங்கிட்ட கருத்து இருந்ததுன்னா நீயும் அதை கலை வடிவமா எடுத்துட்டு வர வேண்டியதுதானே. அப்படி தானே நீ சண்டை போடணும். அதைவிட்டுட்டு ஒருத்தன் ஏன் எடுக்கிறான்னு அவதூறு சொல்லக் கூடாது. அவர் சினிமாவின் மூலமாக ஒரு அரசியலை சொல்றாருன்னா நீயும் சினிமா மூலமாக பதில் சொல்லு. அதுக்கு உங்கிட்ட திராணி இல்ல. அந்த கலை வடிவத்த உன்னால பயன்படுத்த முடியலைன்னா அவதூறு சொல்லாத. கேவலப்படுத்தாத, குறை சொல்லாத” என்றார்.  

Advertisment