மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் இன்று(17.10.2025) தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Advertisment

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தை விக்ரம், துருவ், அனுபமா, ரஜிஷா விஜயன், ஆகியோர் ரசிகர்களுடன் திரையரங்கிற்கு சென்று பார்த்தனர். மேலும் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்தும் திரையரங்கு சென்று பார்த்தனர். இதனிடையே அமீர் மதுரையில் உள்ள திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் பகிர்ந்தார். 

Advertisment

பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தும் அப்படி ஒரு நடிகர் வரும்போது அவருக்கு ஆதரவாக மற்ற நடிகர்கள் வருவார்களா என்றும் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அப்படியெல்லாம் யாரும் வர மாட்டார்கள். எம்ஜிஆர் வரும்போது அவருக்கு பின்னாடி எல்லா நடிகர்களும் வரவில்லை. விஜயகாந்த் வரும் போதும் அப்படித்தான். அவரவர்கள் தனியாக வந்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்கள். நடிகர்களும் சமூகத்தில் ஒருவர்கள் தான். பெரும்பான்மையான மக்களுடைய அன்பவை பெற்றவர்கள். அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என நாம் சொல்லக்கூடாது. 

எம்ஜிஆர் போன்று லட்சக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்ற ஒரு நபரை அண்ணா ஒரு கருவியாக எடுத்துக் கொண்டார். எம்ஜிஆர் என்பது ஒரு வாள். அந்த வாளை கையில் எடுத்து கொண்டு அண்ணா என்ற போர் வீரர் ரொம்ப சரியாக பயன்படுத்தினார். திராவிட கருத்துகளை எம்ஜிஆர் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தார். அப்போது வீரனும் சரியாக இருந்தார். அந்த வாளும் சரியாக பயன்பட்டது. அதே போல ஒரு வாள் இப்போது கிளம்பியிருக்கிறது. ஆனால் அந்த வாளை சரியாக பயன்படுத்த ஒரு போர் வீரன் இல்லை. அந்த வாள் நல்லவர்கள் கையில் கிடைத்தால் நன்றாக பயன்படும். கெட்டவர்கள் கையில் கிடைத்தால் அது தவறாகத்தான் போய் முடியும்” என்றார். 

Advertisment