தமிழ் சினிமாவில் சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணி என்றாலே அது வெற்றிப்படமாகத் தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்து வந்தது. அந்த வகையில் இவர்களின் கூட்டணியில் உருவான படம் தான் அமைதிப்படை. இப்படம் 1994ஆம் ஆண்டு வெளியானது. அமைதிப்படை, மேடை அரசியலைக் கடந்து யதார்த்த அரசியலை மக்களிடையே கொண்டு சேர்த்ததில் மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் சத்யராஜ், மணிவண்ணன் உட்பட கஸ்தூரி, ரஞ்சிதா, மலேசியா வாசுதேவன், சுஜாதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.  

Advertisment

இப்படம், எந்த கால அரசியலுக்கும் பொருந்தும் வகையிலான திரைக்கதையையும், வசனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில் காலம் கடந்த காவியமாக இப்படம் பார்க்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் பலப் படங்கள் மறுவெளியீடு (ரீ-ரிலீஸ்) செய்யப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அமைதிப்படை படமும் மறுவெளியீடு செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.  

Advertisment

ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் ‘அமைதிப்படை’ விரைவில் மறுவெளியீடு செய்யப்பட இருப்பதாக கார்த்திக் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் டால்பி ஒலியுடன் 4கே தரத்தில் வெளியிடப்பட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இப்படம் வெளியான அப்போதைய காலகட்டத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டால் மீண்டும் பெரிய அளவிலான வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.