இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக ரஜினியை வைத்து கூலி படம் இயக்கி இருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 மற்றும் பாலிவுட்டில் ஆமீர்கானுடன் ஒரு படம் பண்ண கமிட்டாகி இருந்தார். இதனிடையே ரஜினி - கமல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒன்றாக நடிக்கும் படத்தை இவர் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வெளியேறி விட்டார்.
அதேபோல் பாலிவுட்டிலும் அவர் இயக்க உள்ள ஆமிர்கானின் படமும் கைவிடப்பட்டது. இதனால் விரைவில் அவர் கைதி 2 படம் இயக்குவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. இதனிடையே நாயகனாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சம்மீபத்தில் தகவல் வெளியானது போல் அல்லு அர்ஜூனை வைத்து அவர் படம் இயக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இசை அனிருத். படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்கவுள்ளது. இது அவரது கனவுப் படமான ‘இரும்பு கை மாயாவி’ கதை என சொல்லப்படுகிறது.
அல்லு அர்ஜூன் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருவதால் அப்படத்தை முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அல்லு அர்ஜூனின் 23வது படமாக உருவாகிறது. இப்படம் குறித்து கூறும் அவர், கதை மனதிலே நிற்பதாகவும் படப்பிடிப்பிற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் லோகேஷுடன் இணைந்ததில் மகிழ்ச்சி என்றும் அனிருத்துடன் இறுதியாக இணைந்துவிட்டதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூனே மனம் திறந்து இப்படி தெரிவித்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Follow Us