நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் துபாய் மற்றும் ஸ்பெய்னில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார்.
இப்போட்டிகளை தொடர்ந்து டிசம்பரில் நடக்கும் ஆசியன் லெ மான்ஸ் தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர தொடர் மற்றும் அடுத்தாண்டு மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர், கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். இந்த நிலையில் அஜித்துக்கு, கார் ரேஸ் தொடர்பாக இத்தாலியில் விருது கொடுக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் ஓ மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் சார்பில் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆப் தி இயர் 2025’ என்ற விருதை அஜித் பெற்றுக்கொண்டார். இதில் கலந்து கொள்ள அஜித் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.
விருது பெற்றப்பின் மேடையில் பேசிய அஜித், “இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நினைவு கூறுகிறேன். அவர் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களை கேள்வி பட்டிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர், பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கிறது. இந்த சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய குடும்பத்துக்கும் நன்றி கூறுகிறேன்.
மேலும் ஒரு கோரிக்கையையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கு இது போன்ற ரேசிங் சீரிஸ்களை கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இந்தியாவும் மோட்டார் ஸ்போட்ஸில் சர்வதேச அளவுக்கு செல்லும் என நம்புகிறேன்” என்றார். இந்த விருது, மறைந்த கார்ரேஸர் மற்றும் தொழிலதிபரான பிலிப் சாரியோலின் நினைவாக அவரது மகள் கோரில் சார்பில் வழங்கப்படுகிறது. பிலிப் சாரியோல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார் பந்தய விபத்தில் எதிர்பாராதமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/20-21-2025-11-24-11-18-10.jpg)